பக்கம் எண் :

3844.

     தந்தைநீ அலையோ தனயன்நான் அலனோ
          தமியனேன் தளர்ந்துளங் கலங்கி
     எந்தையே குருவே இறைவனே முறையோ
          என்றுநின் றோலிடு கின்றேன்
     சிந்தையே அறியார் போன்றிருந் தனையேல்
          சிறியனேன் என்செய்கேன் ஐயோ
     சந்தையே புகுந்த நாயினில் கடையேன்
          தளர்ச்சியைத் தவிர்ப்பவர் யாரே.

உரை:

     எனக்கு அருள் நெறித் தந்தையே! ஞான குருவே! என் உயிர்க்கு இறைவனே! நீ எனக்கு அருளுறும் தந்தையாகவும் நான் உனக்கு அருள் பெறுதற்குரிய மகனாகவும் இருக்கவும், தனியேனாகிய நான் மனம் சோர்ந்து கலக்கமுற்று வருந்துவது முறையாகாதே என்று நின் திருமுன் நின்று ஓலமிடுகின்றேன்; என் மனநிலையை அறியாதவர் போல நீ வாளா இருக்கின்றாய்; அதனால் சிறுமை பொருந்திய யான் யாது செய்ய வல்லேன்; சந்தையிற் புகுந்த நாயினும் கடைப்பட்டவனாகிய என்னுடைய சோர்வைப் போக்க வல்லவர் உன்னைத் தவிர யாவருளர். எ.று.

     இறைவனுக்கும் தமக்குமுள்ள தொடர்பு கூறுவார், “தந்தை நீ அலையோ தனயன் நான் அலனோ” எனவும், தந்தையும் மகனுமாகத் தொடர்புற்றிருக்கும் நிலையில் மகனாகிய நான், என்னுடைய தளர்ச்சி போக்கும் அன்புடைத் தந்தையின் முன் உடல் தளர்ந்து உள்ளம் அழிவது முறையாகாது என்பாராய், “தமியனேன் தளர்ந்து உளங் கலங்கி எந்தையே குருவே இறைவனே முறையோ என்று ஓலிடுகின்றேன்” எனவும் மொழிகின்றார். ஓலம் - ஈறு குறைந்து ஓல் என வந்தது. தன்னை அடைந்தாருடைய மனநிலையை அறியாதவர் போலிருப்பது அருள் செய்தற்கு விரும்பாமை புலப்படுத்தலின் அதனால் தாம் வருத்தம் மிகுந்தமை வெளிப்படுத்தற்கு, “சிந்தை யறியார் போன்று இருந்தனையேல் சிறியனேன் என் செய்வேன் ஐயோ” என்று செப்புகின்றார். சந்தை - வருவார் போவார் நிறைந்த இடம். அவ்விடத்திற்குப் புகுந்த நாய் பலராலும் அலைக்கப்படுவது பற்றித் தம்மை, “சந்தையே புகுந்த நாயினில் கடையேன்” என்று தம்மையே இழித்துக் கூறுகின்றார்.

     பிறிதோரிடத்தும் “சந்தை நாயெனப் பந்தலுற்று அலைவேன்” என்று வள்ளற் பெருமான் உரைப்பது காண்க. உயிர்கட் குளவாகும் தளர்ச்சியைப் போக்குதற்கு இறைவனை யல்லது துணை யாவார் பிறர் எவரையும் பெறல் அரிதாதலின், “தளர்ச்சியைத் தவிர்ப்பவர் யாரே” என இசைக்கின்றார்.

     இதனால், தனது மனத் துயரினை அறியாதார் போன்று வாளா விருத்தல் முறையாகாதென முறையிட்டவாறாம்.

     (3)