பக்கம் எண் :

3849.

     என்நிகர் இல்லா இழிவினேன் தனைமேல்
          ஏற்றினை யாவரும் வியப்பப்
     பொன்இயல் வடிவும் புரைபடா உளமும்
          பூரண ஞானமும் பொருளும்
     உன்னிய எல்லாம் வல்லசித் தியும்பேர்
          உவகையும் உதவினை எனக்கே
     தன்னிகர் இல்லாத் தலைவனே நினது
          தயவைஎன் என்றுசாற் றுவனே.

உரை:

     ஒப்புயர்வற்ற தலைவனாகிய பெருமானே எனக்கு ஒப்பாக ஒன்றையும் கூற வியலாத இழிதகவினை யுடைய என்னைக் காண்போர் யாவரும் வியக்குமாறு மேலவனாக உயர்த்தி யருளினாய்; அன்றியும் பொன்னிற மேனியும் குற்றமில்லாத உள்ளமும் நிறைந்த ஞானமும் பொருளும் எண்ணிய எல்லாவற்றையும் செய்ய வல்ல சித்தியும் மிக்க மகிழ்ச்சியும் எனக்கு உதவி யருளினாய்; உன்னுடைய அருட் சிறப்பை என்னென்று சொல்வேன். எ.று.

     இழி தன்மையையுடைய பொருட்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்பட இழிந்தவன் எனத் தம்மை இழித்தற்கு, “என் நிகரில்லா இழிவினேன்” எனவும், இவ்வியல்பால் மேலவர் மதிக்கும் மேன்மைக்கு யான் சிறிதும் தகுதி யில்லாதவனாகவும், இவ்வுலகில் என்னைக் கண்டவர் அனைவரும் வியக்குமாறு மேல்நிலையில் ஏற்றி யருளினாய் என்பாராய், “என் நிகரில்லா இழிவினன் தனை யாவரும் வியப்ப மேல் ஏற்றினை” எனவும் பரவுகின்றார். இவ்வாறே மாணிக்கவாசகரும், “யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான் யாவர்க்கும் கீழாம் அடியேனை யாவரும் பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான் மற்றறியேன் செய்யும் வகை” (வெண்பா) என்று கூறுவது காண்க. திருவருள் ஞானப்பேற்றால் தாம் எய்திய நலன்களை எடுத்துரைக்கும் வள்ளற் பெருமான், “பொன்னியல் வடிவும் புரைபடா உளமும் பூரண ஞானமும் பொருளும் உண்ணிய எல்லாம் வல்ல சித்தியும் பேருவகையும் எனக்கு உதவினை” என்று ஓதுகின்றார். திருவருள் ஞானம் கைவரப் பெற்றோருடைய மேனி பொன்னிறம் எய்துமெனச் சான்றோர் கூறுதலால், “பொன்னியல் வடிவு” என எடுத்துரைக்கின்றார். குறை - குற்றம். உள்ளம் குற்றத்தால் மாசுப்பட்ட வழி பூரண ஞானம் எய்தாதாதலால், “புரைபடா உளமும் பூரண ஞானமும்” தான் பெற்றதாகக் கூறுகின்றார். பேருவகை - மாறாத இன்பம். உலகியலில் இடும்பையும் இன்பமும், புணர்வும் பிரிவும், பகலும் இரவும் போல மாறி மாறி வருதல் இயல்பாதலின் அதற்கு மாறாகத் தமக்கு மாறா இன்பத்தை இறைவன் உதவினான் என்று விளக்குதற்கு, “பேருவகை உதவினை” எனவும், எண்ணிய எண்ணியாங்கு செய்தல் வல்லவர்க்கு உவகை மாறாதாதலின், “உன்னிய எல்லாம் வல்ல சித்தியும் பேருவகையும் எனக்கு உதவினை” எனவும் விதந்து மொழிகின்றார். தன்னிகரில்லாத் தலைவனாதலால் இறைவனுக்கு இத்திருவருள் நலன்களை அளிப்பது எளிதாயினும் நிகரில்லாத இழிவு உடைய தமக்கு இவை எய்துவது மிக்க வியப்பைத் தருதலின், “நினது தயவை என்னென்று சாற்றுவேன்” என்று பாராட்டுகின்றார்.

     இதனால், இறைவன் தமக்குச் செய்த அருள் நலத்தை வியந்து நன்றியுணர்வு தோன்ற தெரிவித்தவாறாம்.

     (8)