பக்கம் எண் :

3861.

     கையின் நெல்லிபோல் விளங்குசிற்
          றம்பலங் கலந்தருள் பெருவாழ்வே
     மெய்யி லேவிளைந் தோங்கிய
          போகமே மெய்ப்பெரும் பொருளேநான்
     ஐய மற்றுரைத் திட்டவிண்
          ணப்பம்ஏற் றளித்தனை இஞ்ஞான்றே
     செய்யும் இவ்வுடல் என்றுமிங்
          கழிவுறாச் சிவவடி வாமாறே.

உரை:

     அங்கையில் உள்ள நெல்லிக் கனி போல் யாவரும் காண விளங்கும் சிற்றம்பலத்து எழுந்தருளுகின்ற, பெருவாழ்வை யுடைய பெருமானே! மெய்ம்மை நெறியில் விளைந்து சிறக்கின்ற சிவபோகமே! மெய்ம்மையான பெரிய பொருளே! நான் சந்தேக விபரீதமின்றி எடுத்துரைத்த விண்ணப்பத்தை ஏற்றருளிப் பிரம்மனால் செய்யப்பட்ட எனது இவ்வுடல் இப்பொழுதே என்றும் அழியாத சிவஞான வடிவம் எய்துமாறு அருள் புரிந்தாய்; இதற்கு என்ன கைம்மாறு யான் செய்வேன் எ.று.

     அங்கையில் ஏந்திய நெல்லிக் கனி இனிது யாவரும் காண விளங்குவது போலச் சிற்றம்பலத்தின்கண் எழுந்தருளுகின்றானாதலால் சிவனை, “கையில் நெல்லி போல் விளங்கு சிற்றம்பலம் கலந்தருள் பெருவாழ்வே” என்று பாராட்டுகின்றார். மெய்ம்மை நெறியில் நின்று விளங்குகின்ற சிவ போகப் பொருளாதலால், “மெய்யிலே விளைந்து ஓங்கிய போகமே” எனவும், மெய்ம்மை வடிவாய் அமைந்துள்ளமை பற்றி, “மெய்ப் பெரும் பொருளே” எனவும் விளம்புகின்றார். கருதும் பயன் எய்துமோ எய்தாதோ என ஐயம் கொண்டு அலமராத உள்ளத்துடன் விண்ணப்பம் செய்வது தோன்ற, “ஐயம் அற்று உரைத்திட்ட விண்ணப்பம்” என்று சிறப்பிக்கின்றார். இஞ்ஞான்று - இக்காலம். சிவ வடிவு - சிவஞான வடிவம். பிரம்மனால் படைக்கப்படுவது பற்றித் தமது உடம்பை, “செய்யும் இவ்வுடல்” என்று எடுத்துரைக்கின்றார்.

     (10)