3863. தற்சோதி என்னுயிர்ச் சத்திய
ஜோதி தனித்தலைமைச்
சிற்சோதி மன்றொளிர் தீபக
ஜோதிஎன் சித்தத்துள்ளே
நற்சோதி ஞானநல் நாடக
ஜோதி நலம்புரிந்த
பொற்சோதி ஆனந்த பூரண
ஜோதிஎம் புண்ணியனே.
உரை: தன்னிற் றானே எழுகின்ற ஒளியும், என் உயிரின்கண் நிலவும் உண்மை ஒளியும், ஒப்பற்ற தலைமை சான்ற ஞான ஒளியும், அம்பலத்தின்கண் ஒளிர்கின்ற சிவஞானத் தீப ஒளியும், என்னுடைய சிந்தையின் உண்ணின்று ஓங்குகின்ற நல்லொளியும், ஞானம் விரிகின்ற நல்ல நாடக ஒளியும், ஆன்மாவுக்கு நலம் செய்கின்ற அழகிய ஒளியும், நிறைந்த ஆனந்த ஒளியுமாகிய எங்கள் புண்ணிய மூர்த்தியே வணக்கம். எ.று.
தற்சோதி - பிறிது ஒன்றையும் பற்றாது தானே தனக்குப் பற்றாய் நின்று ஒளிரும் சிவசோதி. உயிர்க்குயிராய் நின்று உண்மை யுணர்வை எழுப்பி, விளங்கச் செய்தலின் சிவசோதியை, “என்னுயிர்ச் சத்திய சோதி” என்று சிறப்பிக்கின்றார். தனக்குஒப்பதும் மிக்கதும் இல்லாமல் தலைமைப் பேரொளியாய் அமைவது பற்றிச் சிவபெருமானை, “தனித் தலைமைச் சிற்சோதி” எனவும், ஞான சபையின்கண் ஞான வுருவாய் நின்று திகழ்தலால், “மன்று ஒளிர் தீபக சோதி” எனவும், ஞான சபையிலே யன்றிச் சிந்திப்பார் சிந்தனைக்குள்ளும் சித்த ஒளியாய்த் திகழுமாறு விளங்க, “என் சித்தத்துள்ளே நற்சோதி” எனவும், ஞான நாடகம் புரியுமிடத்துத் தெளிந்த ஞான ஒளி தோன்றி எங்கும் பரவுதல் பற்றி, “ஞான நன்னாடக சோதி” எனவும், அச்சோதியைத் தரிசிப்பார்க்கு நலம் மிகுவித்தலின், “நலம் புரிந்த பொற் சோதி” எனவும், நிறைந்த ஆனந்தத்தை நல்குவது பற்றி, “ஆனந்த பூரண சோதி” எனவும் போற்றுகின்றார். புண்ணியத் திருவுருவை உடையவனாதல் பற்றி, “என் புண்ணியனே” என்று போற்றுகின்றார்.
இதனால், புண்ணிய மூர்த்தியாகிய சிவபெருமான் பல்வேறு வகையான சோதி வடிவங்கள் உற்று உயிர்கட்கு நலம் புரியும் திறம் தெரிவித்தவாறாம். (2)
|