பக்கம் எண் :

39. பொதுநடம் புரிகின்ற பொருள்

    அஃதாவது, திருச்சிற்றம்பலத்தில் திருநடம் புரிகின்ற, சிவபெருமானைப் பொருளாகக் கொண்டு பாடுவது. இதன்கண் பாட்டுத் தோறும் பொதுநடம் புரிகின்ற பொருளை மகுடமாக வைத்துப் பாடுதலின் இது பொதுநடம் புரிகின்ற பொருள் என்னும் பெயரை யுடையதாயிற்று.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3872.

     அருட்பெருஞ் சோதி அமுதமே அமுதம்
          அளித்தெனை வளர்த்திட அருளாம்
     தெருட்பெருந் தாய்தன் கையிலே கொடுத்த
          தெய்வமே சத்தியச் சிவமே
     இருட்பெரு நிலத்தைக் கடத்திஎன் றனைமேல்
          ஏற்றிய இன்பமே எல்லாப்
     பொருட்பெரு நெறியும் காட்டிய குருவே
          பொதுநடம் புரிகின்ற பொருளே.

உரை:

     அருட் பெருஞ் சோதியாகிய அமுத மயமான பெருமானே! அருள் ஞான அமுதத்தை எளியேனான எனக்குத் தந்து, என்னை அருள் நெறியில் வளர்த்தற் பொருட்டுத் திருவருளாகிய தெளிந்த பெருமை மிக்க தாயின் கையிலே என்னைக் கொடுத் தருளிய தெய்வமே! நிலையாய சிவ பரம்பொருளே! தமது மாயையால் இருள் செய்கின்ற பெரிய நிலவுலக வாழ்வைக் கடந்து வெல்வாயாக என்று என்னைச் சிவஞான மேல் நெறியில் உயர்த்தி யருளிய இன்பப் பொருளே! பொருளாகக் கருதப்படும் பெருநெறிகள் பலவற்றையும் அறிவித் தருளிய ஞான குருவே! திருச்சிற்றம்பலத்தில் நடம் புரிந்தருளும் பரம்பொருளே வணக்கம். எ.று.

     திருவருள் ஞானம் பெருமை சான்ற ஒளியாதலின் அதனை “அருட் பெருஞ் சோதி” என்றும், அது தன்னைப் பெறுவார்க்கு அமுதம் போல இன்பம் செய்தலின், “அமுதமே” என்றும் போற்றுகின்றார். இறைவன் திருவருளை அருட் சத்தி என்றும், அது இறைவனுக்குத் தேவி என்றும், அந்த அருட் சத்தியால் உயிர்கட்கு வாழ்வு உண்டாதலால் உயிர்களை வளர்க்கும் தாய் என்றும் ஞான நூல்கள் உரைத்தலால், என்னை அமுதம் அளித்து வளர்த்தற் பொருட்டு, “அருளாம் தெருட் பெருந் தாய் தன் கையிலே கொடுத்த தெய்வமே” என்று சிறப்பிக்கின்றார். அருட் சத்தி தெளிந்த ஞான வடிவாய் உலகெலாம் படைத்தளிக்கும் பெருமையுடையதாய் விளங்குவது பற்றி, “அருளாம் தெருட் பெருந் தாய்” எனவும், உலக வாழ்வால் உயிர்கட்கு ஞானம் எய்துவித்தல் பற்றி வாழ்விக்கும் அருட் சத்தியின் செயலை, “அமுதம் அளித்தெனை வளர்த்திட” எனவும் குறித்து மொழிகின்றார். உயிர்கட்கு அமுதமாகிய ஞான மளித்து வளர்த்தல் வேண்டி அருளாகிய தாய் கையிலே சிவபெருமான் அவ்வுயிர்களைக் கொடுத்துள்ளான் என்பது குறிப்பு. என்றும் உள்ளதாதலின் சிவ பரம்பொருளை, “சத்தியச் சிவமே” என்று துதிக்கின்றார். உலகியல் வாழ்வு மாயா காரியமாய் உயிர்களை அனாதியே மறைத்திருக்கும் மலப்பிணிப்பைப் போக்குதற்கு மாயம் செய்யும் உலகியல் வாழ்வைத் தந்து அதனை வாழ்ந்து கடந்து உய்தி பெறுக என்று இறைவன் படைத்தளித்தலின், “இருட் பெருநிலத்தைக் கடத்தி என்று என்னை மேலேற்றிய இன்பமே” என இயம்புகின்றார். இருளைச் செய்யும் மாயையின் காரியமாதலின் நிலவுலக வாழ்வை, “இருட் பெரும் நிலம்” என எடுத்தோதுகின்றார். நிலவுலக வாழ்வை வாழ்வாங்கு வாழ்ந்து இன்ப நிலை பெற வேண்டுதலின், “நிலத்தைக் கடத்தி என்று என்றனை மேலேற்றிய இன்பமே” என வுரைக்கின்றார். கடத்தி என்றவிடத்து, என்று என்னும் சொல் எஞ்சி நின்றது. இருள் செய்யும் மாயா காரியமாகிய உலகியலைக் கடந்தவிடத்து எய்துவது இறவாப் பேரின்பமாதலின், “மேல் ஏற்றிய இன்பமே” என்று இசைக்கின்றார். உயிர்கட்கு உய்தி காட்டுவன எனக் காலந்தோறும் சான்றோர்கள் தோன்றிப் பல உண்மை நெறிகளை யுணர்த்தி இருக்கின்றாராதலால், அவற்றின் வன்மை மென்மைகளை அறிந்து ஏற்ற நெறியை மேற்கொள்ளுதற்கு நன்ஞானம் வேண்டுதலின், அதனையும் இறைவன் குருமுதல்வனாய் எழுந்தருளி உபதேசித்தல் பற்றி, “எல்லாப் பொருட் பெருநெறியையும் காட்டிய குருவே” என்று மொழிகின்றார். சான்றோர் காட்டிய நெறிகள் பலவும் அவ்வக்காலத்திற் கேற்ப வேண்டிய மெய்ப்பொருளையும் மெய்ந்நெறியையும் காட்டுவனவாதலால் அவற்றை, “எல்லாப் பொருட் பெருநெறியும் எனப் புகல்கின்றார்.

     இதனால், இறைவன் உயிர்களை அருட் சத்தியாகிய தேவி கையில் தந்து, உலகியல் வாழ்வு நல்கும் ஞானமாகிய அமுதத்தை ஊட்டி, உலகில் வாழ்வாங்கு வாழ்ந்து உய்தி பெற உதவிய செம்மை நெறி விளக்கியவாறாம்.

     (1)