பக்கம் எண் :

3873.

     சித்தெலாம் வல்ல சித்தனே ஞான
          சிதம்பர ஜோதியே சிறியேன்
     கத்தெலாம் தவிர்த்துக் கருத்தெலாம் அளித்த
          கடவுளே கருணையங் கடலே
     சத்தெலாம் ஒன்றே சத்தியம் எனஎன்
          தனக்கறி வித்ததோர் தயையே
     புத்தெலாம் நீக்கிப் பொருளெலாம் காட்டும்
          பொதுநடம் புரிகின்ற பொருளே.

உரை:

     அம்பலத்தில் நடம் புரிகின்ற பரம் பொருளே! சித்தி வகைகள் எல்லாவற்றையும் செய்ய வல்ல சித்தனே! ஞான நிலையமாகிய சிதம்பரத்தில் விளங்குகின்ற ஒளிப் பொருளே! சிறுமை யுடைய எனது பொய்ம்மைகளைப் போக்கி உண்மைக் கருத்துக்களே எய்துமாறு எனக்கு அருள்புரிந்த கடவுளே! கருணை மிகுதியால் கடல் போன்றவனே! சத்தெனப்படுகின்ற பொருள்கள் எல்லாம் சத்தாந்தன்மை யுடையவை என எனக்கு அறிவுறுத்தருளிய தயாகுருவே! என்னுடைய புதுமைப் புனைவுகள் அனைத்தையும் போக்கி மெய்ம்மைப் பொருள் எல்லாவற்றையும் காட்டி யருளுகின்ற பெருமானே, வணக்கம். எ.று.

     அணிமா, மகிமா, லகிமா என வரும் சித்திகள் எட்டினையும் முட்டாது செய்ய வல்ல முதல்வன் என்பதற்கு, “சித்தெலாம் வல்ல சித்தனே” என்று கூறுகின்றார். ஞான சிதம்பரம் - ஞானமாகிய பெருவெளிச் சிதம்பரம் என்பது சித்து அம்பரம் எனப் பிரிந்து ஞானமாகிய ஆகாசம் எனப் பொருள்படும். அதனால் இதனைச் சிதாகாசம் எனவும், ஞானப் பரவெளி எனவும் சான்றோர் கூறுவர். ஞானப் பெருவெளியில் விளங்கும் ஞான சூரியன் என்பது தோன்ற, “ஞான சிதம்பர சோதியே” என்று உரைக்கின்றார். கத்து - பொய். பொருளில்லாத ஆரவாரப் பேச்சு. “களவும் கத்தும் அற” என்பது பழமொழி. பொய்க் கருத்துக்களை ஆரவாரமாகப் பேசி வலியுறுத்த முயலுவதைக் கத்துதல் என்பர். கருத்து - உண்மைப் பொருள். பொய்யை நீக்கி மெய்ம்மையை யுணர்ந்து உரைக்கச் செய்த நலம் பற்றி இறைவனைக் “கத்தெலாம் தவிர்த்துக் கருத்தெலாம் அளித்த கடவுளே” என்று புகழ்கின்றார். வற்றாப் பெருங் கருணை உருவினனாதலால் சிவனை, “கருணையங் கடலே” என்று போற்றுகின்றார். சத்து - நிலையாயது; மெய்ப்பொருள் என்றுமாம். மெய்ப் பொருள்கள் யாவும் என்றும் அழியாத தன்மை யுடையவை என்பதை உள்ளம் நன்குணர அறிவுறுத்தருளிய இறைவனது திருவருள் நலத்தை, “சத்தெலாம் ஒன்றே சத்தியம் என என்றனக்கு அறிவித்த தயையே” என்று ஆண்டவனைப் புகழ்கின்றார். இல்லதனை உள்ளது போலப் புதுமை தோன்ற உரைக்கும் திறம், புத்து எனப்படுகின்றது. புதிது புனைந்து பொய்யை நிலைநாட்டும் இச்செய்கை குற்றமுடைத்தாதல் பற்றி, “புத்தெலாம் நீக்கி” என்றும், உள்ளதன் உண்மையை உள்ளவாறு உணரும் திறத்தை இறைவன் திருவருள் உள் நின்று காட்டுதல் பற்றி, “பொருளெலாம் காட்டும் பொது நடம் புரிகின்ற பொருளே” என்றும் விளம்புகின்றார்.

     இதனால், சிதம்பர சோதியாகிய சிவபெருமான் உண்மைக் கருத்தை யுணர்வித்து, மெய்ம்மைப் பொருளை உணரக் காட்டி உதவும் திறம் எடுத்தோதியவாறாம்.

     (2)