பக்கம் எண் :

3890.

     மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான
          விளக்கமே விளக்கத்தின் வியப்பே
     கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த
          கருணையே கரிசிலாக் களிப்பே
     ஐம்மையே அதற்குள் அதுஅது ஆகும்
          அற்புதக் காட்சியே எனது
     பொய்ம்மையே பொறுத்துப் புகலளித் தருளிப்
          பொதுநடம் புரிகின்ற பொருளே.

உரை:

     என்னிடத்துளவாகும் பொய்ம்மைகளைப் பொறுத்தருளி எனக்கும் அபயமளித்து அம்பலத்தில் ஆடல் புரிகின்ற பரம்பொருளே! மெய்யாக எனக்குக் கிடைத்த மெய்ப்பொருளே! ஞான விளக்கமே! அவ்விளக்கத்தால் உள்ளத்தில் தோன்றும் வியப்பின் வடிவாகியவனே! இன்பமில்லாத நிலையைப் போக்கி இன்ப நிலையாகிய மங்கலத்தை எனக்கு அளித்தருளிய கருணாமூர்த்தியே! குற்றமில்லாத களிப்பை நல்குபவனே! வியப்பின் உருவாய் அதற்குள் அதுவதுவாய் நின்று திகழும் அற்புதம் பயக்கும் காட்சிப் பொருளே, வணக்கம். எ.று.

     உலகியல் வாழ்வில், மெய் போலப் பொய்யும் விரைவில் உயிர்களுக்குக் குற்றம் எய்துவித்தலின் அதனைப் பொறுத்தருளி அபய வரமளிக்கும் அருளாளனாதல் பற்றிச் சிவனை, “பொய்ம்மையே பொறுத்துப் புகலளித்து அருளிப் பொது நடம் புரிகின்ற பொருளே” என்று புகழ்கின்றார். மெய்ப்பொருளாய்த் தம் உணர்வால் உணர்தற்குரியதாய் விளங்குவது பற்றி, “மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே” என்று விளம்புகின்றார். மெய்ம்மை யுணர்வால் ஞான மயமாய்த் தோன்றிச் சிவம் உள்ளத்தில் விளங்குவது பற்றி, “ஞான விளக்கமே” எனவும், அவ்விளக்கத்தால் தமக்கு உளதாகிய வியப்பை நயந்து, “விளக்கத்தின் வியப்பே” எனவும் இயம்புகின்றார். கைம்மை - இன்பமில்லாத நிலைமை. அமங்கலமாகிய துன்ப நிலையைப் போக்கி மங்கலமாகிய இன்ப நிலையைத் தமக்கு அருளினமை பற்றி, “மங்கலம் அளித்த கருணையே” என்று கட்டுரைக்கின்றார். கரிசு - குற்றம். இன்பமும் துன்பமும் இரவும் பகலும் போல மாறி வரும் இயல்பினவாதலின் துன்பம் தொடர நிற்கும் களிப்பினை நீக்குதற்கு, “கரிசிலாக் களிப்பே” என்று கூறுகின்றார். இன்பத்தைத் தொடரும் துன்பத்தை ஈண்டுக் கரிசு எனக் குறிக்கின்றார். ஐம்மை - வியப்புக்குரிய தன்மை. வியப்புக்குரிய பொருளாய்க் காணப்படும் பொருளனைத்தும் வியத்தகு நிலைமையில் விளங்கத் தோன்றுதல் பற்றி, “ஐம்மைக்குள் அதுவதுவாகும் காட்சியே” என்று சிவனைச் சிந்திக்கின்றார். எல்லாப் பொருளிலும் கலந்து நின்று அதன்கண் வியப்பு விளைவிக்கும் தன்மையைத் தோற்றுவித்தலால், “அதுவதுவாகும் அற்புதக் காட்சியே” என்று போற்றுகின்றார்.

     இதனால், உலகியற் பொருட்கள் ஒவ்வொன்றிலும் அறிவுடையார் அறிந்து வியக்கும் தன்மை விளங்க, இறைவன் கலந்திருக்கும் அற்புதக் காட்சியைத் தெரிவித்தவாறாம்.

     (19)