40. ஆனந்தானுபவம்
அஃதாவது, சிவஞானத்தால் பெறப்படும் இன்பத்தை அனுபவித்துப்பாடுவது.
நேரிசை வெண்பா 3892. கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின்அருளாம்
வெள்ளத்தை எல்லாம் மிகஉண்டேன் - உள்ளத்தே
காணாத காட்சிஎலாம் காண்கின்றேன் ஓங்குமன்ற
வாணா நினக்கடிமை வாய்த்து.
உரை: புகழ் கொண்டு ஓங்குகின்ற அம்பலத்தில் எழுந்தருளுகின்ற பெருமானே! உனக்கு அடிமையாகும் நலம் எய்தப் பெற்று என்னுள்ளத்தில் படிந்திருக்கும் கள்ள உணர்வுகளெல்லாம் நீக்கி விட்டதோடு நினது திருவருளாகிய இன்ப வெள்ளத்தை மிகவும் உண்டு அதனால் சிறப்புற்ற என்னுள்ளத்தில் இதுகாறும் கண்டறியாத இன்பக் காட்சி எல்லாவற்றையும் கண்டு மகிழ்கிறேன். எ.று.
அம்பலத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருளொளி வழங்குகின்றானாதலால் கூத்தப் பெருமானை, “மன்ற வாணா” எனப் புகழ்கின்றார். மன்றின்கண் எழுந்தருளுவது பற்றி “மன்றவாணன்” என்பது இறைவனுக்குப் பெயராயிற்று. வாணன் - வாழ்நன் என்பதன் மரூஉ. சிவனுக்கு அடிமையாகும் திறம் எல்லார்க்கும் எளிதில் எய்துவதன்றாதலின், “நினக்கு அடிமை வாய்த்து” எனவும், அதனால் தாம் பெற்ற பேறுகள் இவை என்பாராய், நெஞ்சில் படிகின்ற கள்ளத் தன்மை வாய்ந்த எண்ணங்கள் எல்லாவற்றையும் போக்கிக் கொண்டேன் என்பது தோன்ற, “கள்ளத்தை எல்லாம் கடக்க விட்டேன்” எனவும், திருவருள் ஞான இன்பத்தை நிறையப் பெற்று உண்டு மகிழ்ந்தமை புலப்படுத்தற்கு, “நின் அருளாம் வெள்ளத்தை எல்லாம் மிகவுண்டேன்” எனவும், தமது மனத்தின்கண் சிவபரமான ஞான இன்பக் காட்சிகள் பலவற்றையும் கண்டமை விளங்க, “உள்ளத்தே காணாத காட்சி யெல்லாம் காண்கின்றேன்” எனவும் எடுத்துரைக்கின்றார்.
இதனால், அருள் ஞானப் பேற்றால் சிவபரமான ஞான இன்பக் காட்சிகள் கண்டமை தெரிவித்தவாறாம். (1)
|