பக்கம் எண் :

3894.

     மூவர்களும் செய்ய முடியா முடிபெல்லாம்
     யாவர்களுங் காண எனக்களித்தாய் - மேவுகடை
     நாய்க்குத் தவிசளித்து நன்முடியும் சூட்டுதல்எந்
     தாய்க்குத் தனிஇயற்கை தான்.

உரை:

     கடைப்பட்ட நாய்க்கு அரசாசனம் தந்து, அதன் தலையில் அழகிய முடியும் சூட்டுதல் போல் எம்போலியர்க்குத் திருவருள் வழங்குவது எந்தாயாகிய உனக்கு ஒப்பற்ற இயல்பாதலால், பிரமன் முதலிய தேவர் மூவரும் செய்ய முடியாத முடிபுகள் எல்லாவற்றையும் ஏனைத் தேவர்களும் மக்களும் காண எனக்குத் தந்தருளினாய்; நின் கருணை இருந்தவாறு என்னே. எ.று.

     இறைவன் தமக்குத் திருவருள் வழங்கிய திறத்தை மணிவாசகப் பெருமான், “அடியேற்குப் பொற் றவிசு நாய்க்கு இடுமா றன்றே நின் பொன்னருளே” (ஏசறவு) என்று புகழ்ந்துரைப்பது கொண்டு வள்ளற் பெருமானும் தம்மை ஆட்கொண் டருளியதை வியந்து இறைவனை, “மேவு கடை நாய்க்குத் தவிசளித்து நன்முடியும் சூட்டுதல் என் தாய்க்குத் தனி இயற்கைதான்” என்று வியந்துரைக்கின்றார். தவிசு - ஆசனம். பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் தேவர்களுக்கெல்லாம் உயர்ந்த தேவர்களாதலின் அவர்களை, “மூவர்களும்” எனச் சிறப்பிக்கின்றார். அம்மூவரும் காண முடியாத ஞான முடிபாகித் திருவருள் இன்ப முடிபொருளைத் தமக்களித்தான் என மகிழ்கின்றாராதலால், “மூவர்களும் செய்ய முடியா முடிபெல்லாம் யாவர்களும் காண எனக்களித்தாய்” என்று மொழிகின்றார். மக்களில் உயர்ந்த தேவர்களுக்கும் தேவர்களாகிய பிரமன் முதலிய மூவரும் கண்டறிய முடியாத செம்பொருள் முடிபை இறைவன் தமக்கு அறியச் செய்த அருள் நலத்தை, மண்ணுலக மக்களும் காண அருளினான் என்பாராய், “யாவர்களும் காண எனக்கு அளித்தாய்” என்றும் எடுத்துரைக்கின்றார்.

     இதனால், திருவருள் ஞானானந்த முடிபை யாவரும் காணத் தமக்கு இறைவன் அளித்த திறம் தெரிவித்தவாறாம்.

     (3)