பக்கம் எண் :

3916.

     துதிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
          சோதியுட் சோதியே எனது
     மதிவளர் மருந்தே மந்திர மணியே
          மன்னிய பெருங்குண மலையே
     கதிதரு துரியத் தனிவெளி நடுவே
          கலந்தர சாள்கின்ற களிப்பே
     பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே
          பழுத்தபே ரானந்தப் பழமே.

உரை:

     அன்பர்களின் திருவுள்ளத்தில் கோயில் கொண்டு அவர்கட்கு இன்பம் அளித்தற் பொருட்டுச் சிவயோக நெறியாகிய மரத்தில் முற்றக் கனிந்து சிறக்கும் பேரானந்தத்தை நல்கும் சிவமாகிய பெரிய பழமே! அன்பர்களால் துதிக்கப்படுகின்ற திருச்சிற்றம்பலத்தின்கண் திருக்கூத்தாடி விளங்கும் சோதியுட் சோதியாகிய சிவபெருமானே! என்னுடைய அறிவின்கண் நிலைபெற்று அறியாமையாகிய நோயைப் போக்குகின்ற மருந்தே! மந்திரமே! நோய் போக்கும் அக்கமணியே! நிலைபெற்ற பெருங்குணங்களின் உருவாகிய மலை போல்பவனே! மேற்கதியைப் பெற அளிக்கின்ற துரிய காட்சியாகிய தனித்த யோக வெளியின் நடுவில் எழுந்தருளி அருளரசு புரிகின்ற இன்பப் பொருளே, வணக்கம். எ.று.

     அன்பர் அன்பின்கண் நிலையாக எழுந்தருளுவது பற்றி அவர்களது திருவுள்ளத்தை, “பதியுறும் உளம்” எனவும், அதன்கண் எழுந்தருளி இன்பம் பயத்தலால், “இனித்திட” எனவும், என் போன்ற எளியோர் உள்ளத்தின்கண் பேரானந்தப் பெரும் பழமாய் இன்பம் செய்கின்றாய் என்று புகழ்வாராய், “பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேரானாந்தப் பழமே” எனவும் பாடுகின்றார். அன்பர் கூட்டம் எக்காலத்தும் நிறைந்து நின்று துதித்தல் பற்றித் திருச்சிற்றம்பலத்தை, “துதி வளர் சிற்றம்பலம்” என்றும், அங்கே கூத்தப் பெருமான் திருவருள் பேரொளியாய்க் காட்சி வழங்குவது பற்றி, “சோதியுட் சோதியே” என்றும் இயம்புகின்றார். உலக வாழ்வில் உளவாகும் நோய்களைப் போக்குதற்குரிய மருந்து, மந்திரம், மணி என்ற மூன்றுமாய் அறிவின்கண் நிலவி உதவுதல் தோன்ற, “எனது மதிவளர் மருந்தே மந்திர மணியே” என்று புகழ்கின்றார். பெருமையும் சலியாத் தன்மையும் உடைமை தோன்ற, “மன்னிய பெருங் குணமலையே” என்று குறிக்கின்றார். மேலனவாகிய கதிகளைப் பெறுதற்குத் துரியத்தானத்தின்கண் இருந்து யோகம் செய்வார்க்குக் காட்சி தந்து அருள் ஞானம் வழங்குவது பற்றி, “கதி தரு துரியத் தனிவெளி நடுவே கலந்து அரசாள்கின்ற களிப்பே” என்று மொழிகின்றார். மேற் கதிக்குரிய துரியக்காட்சி யோகத்தை, “கதிதரு துரியத் தனிவெளி” என்று சிறப்பிக்கின்றார்.

     இதனால், துரியக் காட்சியிலிருந்து பரவெளியைத் தரிசித்துப் போற்றும் ஞானவான்களுக்கு அருள் நலமளிக்கும் திறம் உரைக்கப்பட்டவாறாம்.

     (3)