3923. தலம்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
தனித்தமெய்ப் பொருட்பெருஞ் சிவமே
நலம்வளர் கருணை நாட்டம்வைத் தெனையே
நண்புகொண் டருளிய நண்பே
வலமுறு நிலைகள் யாவையுங் கடந்து
வயங்கிய தனிநிலை வாழ்வே
பலமுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
உரை: சிவ தலங்களுள் தலைமைத் தலமாக விளங்குகின்ற திருச்சிற்றம்பலத்தின்கண் ஓங்குகின்ற ஒப்பற்ற மெய்ப்பொருளாகிய பெருமை மிக்க சிவபெருமானே! நலம் செய்யும் அருட் பார்வையை என் மேல் செலுத்தி, என்னையும் அன்பனாகக் கொண்டருளிய நண்புருவாகிய பெருமானே! நன்மை மிக்க பதங்கள் யாவையும் கடந்து விளங்குகின்ற தனித் தன்மையை யுடைய வாழ்வுக்குரிய பரம்பொருளே! ஞான பலம் கொண்ட பத்தர் உள்ளத்தின்கண் இன்பம் பெருக என் பொருட்டு நன்கு பழுத்த ஆனந்தம் நிறைந்த சிவக் கனியே, வணக்கம். எ.று.
சிவன் எழுந்தருளும் தலங்கள் எல்லாவற்றுள்ளும் தலைசிறந்தது தில்லைத் திருச்சிற்றம்பலமாதலால், “தலம் வளர் சிற்றம்பலம்” என்றும், அதன்கண் மெய்ம்மைப் பொருளாகிய பரசிவம் ஒப்பற்ற கூத்தப் பெருமானாய் எழுந்தருளுவது பற்றி, “தனித்த மெய்ப் பொருட் பெருஞ்சிவமே” என்றும் புகழ்கின்றார். மெய்ப்பொருட் பெருஞ் சிவம் - மெய்ப் பொருளாகிய பெருமை சான்ற சிவ பரம்பொருள். இறைவனது திருவருள் நாட்டம் எல்லா நலன்களையும் பெருக நல்குவதாதலால், “நலம் வளர் கருணை நாட்டம் வைத்து” எனவும், சித்தாந் தன்மை யுடைமையால் உயிர்களின்பால் அன்பால் ஒன்றி யிருந்து ஒளி நெறி காட்டி உய்வித்தருளுவது பற்றி, “நண்பு கொண்டருளிய நண்பே” எனவும் இயம்புகின்றார். சிவபதம் நலம் பலவும் நிறைந்த தேவ பதங்கள் அனைத்தையும் கடந்து அப்பாலாய் விளங்குவதுடன் ஒப்புயர்வில்லாத உயர்தனி நிலையாக ஓங்குவது பற்றி, “வலமுறு நிலைகள் யாவையும் கடந்து வயங்கிய தனிநிலை வாழ்வே” எனப் பாராட்டுகின்றார். உடம்பாலும் உயிரறிவாலும் உண்டாகின்ற பலங்களை விடப் பக்தி ஞானத்தால் உண்டாகும் பலம் நிலையாய சிறந்த பலமாதலின், அது நிறைந்த உள்ளத்தை, “பலமுறும் உளம்” என்றும், அந்த ஞான பலம் நிறைந்த உள்ளத்திற்கு இனிமை தந்து மேன் மேலும் ஊக்குதல் தோன்ற, “இனித்திட” என்றும், “பழுத்த பேரானந்தப் பழமே” என்றும் பராவி மகிழ்கின்றார்.
இதனால், இறைவன் தனது அருள் நாட்டத்தைச் செலுத்தி உயிர்கட்கு உயர்ந்த நண்பனாய் நலஞ் செய்யும் திறம் தெரிவித்தவாறாம். (10)
|