பக்கம் எண் :

43. திருவடி நிலை

    அஃதாவது, பாட்டுத் தோறும் இறைவன் திருவடிகள் எங்கும் எல்லாப் பொருட்களிலும் கலந்து, பரந்திருக்கும் பெருநிலையை எடுத்தோதுவது. எங்கும் எல்லாமாய்ச் சிறந்து பரந்து விளங்கும் பரம்பொருளின் செம்மை நிலை ஈண்டு அதன் திருவடி மேல் ஏற்றிக் கூறப்படுகிறது. அடியும் முடியும் அறியப் படாத பெருமை யுடையதாயினும் ஆன்மாக்கள் நினைந்து பரவுதற்கு ஏற்புடைமை பற்றித் திருவடி விதந்து பேசப்படுகிறது.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3924.

     உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள்
          உலப்பிலா அண்டத்தின் பகுதி
     அலகுகாண் பரிய பெரியகூட் டத்த
          அவைஎலாம் புறத்திறைச் சார்பில்
     விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற்
          றிருந்தென விருந்தன மிடைந்தே
     இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத்
          தென்பர்வான் திருவடி நிலையே.

உரை:

     பலவாகிய கோடி கோடி உலகங்கள் தங்குகின்ற கெடாத அண்டப் பகுதிகள் அளவிடற் கரிய பெரிய கூட்டங்களாகும்; அவை எல்லாவற்றினும் புறமாகிய தனது உருவில் ஒருசிறு கூற்றில் நீங்காமல் உள்ள அணு ஒன்றில் ஒரு கோடியாகப் பிரிந்த ஒருசிறு கூற்றில் இருந்தது போலச் செறிந்து விளங்குகின்ற பொற் சபையில் திருநடம் புரியும் காலத்து, இருந்தன என்று அறிந்தோர் இறைவனது பெரிய திருவடியின் பெருநிலையை உரைக்கின்றனர். எ.று.

     “பொற் பொதுவில் நடம்புரி தருணத்து திருவடி நிலை அணுவில் ஒரு கோடியுள் ஒருகூற்றில் இருந்தென மிடைந்திருந்தன” எனவும், “உலப்பிலா அண்டப் பகுதி அலகு காண்பரிய பெரிய கூட்டத்தவாம்” எனவும், “அவை எல்லாவற்றினும் இறைச் சார்பில் நிலவும் அணுவில் ஒரு கோடியுள் ஒருகூற்றில் மிடைந்து இருந்தன” எனவும் இயையும். உலப்பு - கெடுதல். அண்டப் பகுதியின் பெருக்கம் கோடி கோடியாம் என்பது பற்றி, “உலகு பல்கோடி கோடி இடங் கொள் உலப்பிலா அண்டத்தின் பகுதி” என்று கூறுகின்றார். அண்டம் ஒன்றின் கண் பல கோடி கோடி உலகுகள் உள்ளன என்றற்கு, “பல்கோடி கோடி உலகுகள் இடங் கொள் அண்டம்” என்று குறிக்கின்றார். எண்ணிறந்த உலகங்களைத் தன்கண் கொண்டிருப்பினும் அவை அழியினும் அண்டங்கள் அழிவில என்பாராய், “உலப்பிலா அண்டத்தின் பகுதி” என்கின்றார். இத்தகைய அண்டப் பகுதிகள் அளவிறந்தனவாய் பெருங் கூட்டமாய் இருப்பவை என்றற்கு, “அண்டத்தின் பகுதி அலகு காண்பரிய பெரிய கூட்டத்த” என்று கூறுகின்றார். இவை எல்லாவற்றையும் தன்கண் அமையக் கொண்டு அவற்றிற்குப் புறமாய்ப் பரந்து விளங்குவது பரம்பொருள் என்றற்கு, “அவை எலாம் புறத்திறை” என்று மொழிகின்றார். இவை எல்லாவற்றுக்கும் புறத்தே தங்குகின்ற பரம்பொருள், தத்தம் சார்பின்கண் ஒட்டி நீங்காது நிறைந்திருக்கும் பல கோடி அணுக்களுள் ஒரு கூற்றில் ஒடுங்கி யிருந்தது போல அண்டத்தின் பகுதிகளில் “மிடைந்து இருந்தன” எனவும், பொற் சபையில் நடம் புரியுமிடத்துத் திருவடியின் பெருநிலை இவ்வாறு உள்ளன என அறிந்தோர் கூறுகின்றனர் எனத் தெரிவித்தற்கு, “வான் திருவடி நிலை பொற் பொதுவில் நடம்புரி தருணத்து என்பர்” எனவும் தெரிவிக்கின்றார்.

     இதனால், அணுவில் ஒரு கோடி கூற்றுள் ஒன்றின்கண் இருந்தது போல, அண்டத்தின் பகுதி யனைத்திலும் பரமன் திருவடிகள் மிடைந்திருக்கின்றன எனத் தெரிவித்தவாறாம்.

     (1)