பக்கம் எண் :

3925.

     தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா
          யேச்சுரன் சதாசிவன் விந்து
     நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி
          நவில்பர சிவம்எனும் இவர்கள்
     இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும்
          இடதுகாற் கடைவிரல் நகத்தின்
     கடையுறு துகள்என் றறிந்தனன் அதன்மேற்
          கண்டனன் திருவடி நிலையே.

உரை:

     தடுக்கப்படும் சிறுமை யில்லாத திருமால், பிரம்மன், உருத்திரன், மாயேச்சுரன், சதாசிவன், விந்து, பிரமம், பராசத்தி, பரசிவம் எனும் இத்தேவ தேவர்கள் இடை நின்று காண்பதற் கில்லாத திருச்சிற்றம்பலத்தில் கூத்தாடுகின்ற இடது கால் கடைவிரல் நகத்தின்கண் கடையில் ஒட்டி யிருக்கின்ற ஒரு துகளென்று அறிந்ததோடு அதற்கு மேலாக விளங்குவது சிவ பரம்பொருளின் திருவடி நிலை யென அறிந்தேன். எ.று.

     பிரமன் முதல் விந்து ஈறாகக் கூறப்பட்ட அறுவரும் தரிசித்தற்காகாத குறை யுடையவர்கள் அல்ல ரெனத் தெளிவு படுத்தற்கு, “தடையுறாப் பிரமன் விண்டு உருத்திரன் மாயேச்சுரன், சதாசிவன் விந்து” என வுரைக்கின்றார். பிரமன், பராசத்தி, பரசிவம் எனும் இவர்கள் தமக்கென உருவும் ஒழுக்கமும் சிறப்பாக உடையவரல்லராதலால், “நடையுறாப் பிரமம் உயர் பராசத்தி நவில் பரசிவம்” என்று மொழிகின்றார். சிவசத்திகளுள் மேன்மை யுடைமை பற்றிப் பரையை “உயர் பராசத்தி” என்றும், அதனை யுடைய சத்திமானாகிய சிவத்தைப் பரசிவம் என ஆகமங்கள் கூறுதலின், “நவில் பரசிவம்” என்றும் நவில்கின்றார். திருச்சிற்றம்பலத்தின்கண் கூத்தாடுகின்ற சிவபெருமானைக் காண்பவர், காட்சிக்கு இடை நின்று தடுத்தலின்மை பற்றி, “இவர்கள் இடையுறாத் திருச்சிற்றம்பலம்” என்று ஏத்துகின்றார். மேலே கூறிய பிரமன் முதல் பரசிவம் ஈறாகக் கூறப்படும் தேவதேவர்கள் பேராற்றலும் பெருஞ் செயலும் உடையவராயினும் கூத்தாடும் சிவபரம்பொருளை நோக்க, அதன் திருவடிக் கடை விரலில் ஒட்டிய சிறு துகளுக்கு ஒப்பாக எண்ணப்படும் சிறுமையுடையவர் என்று கண்டமை புலப்பட, “இடது கால் கடை விரல் நகத்தின் கடையுறு துகள் என்று அறிந்தனன்” என்றும், திருவடியில் பெருமை புலப்பட, “அதன் மேல் கண்டனன் திருவடி நிலையே” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், திருச்சிற்றம்பலக் கூத்தப் பெருமானுடைய இடது திருவடிக் கடை விரல் நகத்தின் கடையில் ஒட்டிய துகளெனப் பிரமன் முதலிய தேவ பதங்கள் அமைந்திருத்தலை அறிந்தமை, எல்லாவற்றுக்கும் மேலாக விளங்குவது திருவடி நிலை என்றும் தெரிந்தமை உரைத்தவாறாம்.

     (2)