3935. பாலானைத் தேனானைப் பழத்தி னானைப்
பலனுறுசெங் கரும்பானைப் பாய்ந்து வேகாக்
காலானைக் கலைசாகாத் தலையி னானைக்
கால்என்றும் தலையென்றும் கருதற் கெய்தா
மேலானை மேல்நிலைமேல் அமுதா னானை
மேன்மேலும் எனதுளத்தே விளங்கல் அன்றி
ஏலானை என்பாடல் ஏற்றுக் கொண்ட
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
உரை: பாலும் தேனும் பழமும் சுவை மிக்க செங்கரும்பின் சாறும் போல்பவனும், ஊடுருவிச் சென்று வேறாதல் இல்லாத பிராணக்காற்றையும், கலை வித்தை முதலிய தத்துவங்களால் அழியாத நிலையையுடையவனும், அடி என்றும் முடி என்றும் எண்ணி அறிதற்கியலாத மேல்நிலையையுடையவனும், அம்மேல் நிலையில் அமுதமாய் ஊறி இன்பம் செய்பவனும், மேலும் மேலும் என் உள்ளக் காட்சியில் விளங்குவதன்றிக் கருவி கரணங்களால் எட்டப் படாதவனும், என்னுடைய பாட்டுக்களை ஏற்றருளுகின்ற தலைவனுமாகிய சிவபெருமானைக் கண்களாற் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன். எ.று.
சிவ சிந்தனைக்கண் சித்தத்தில் சுரந்து மகிழ்விக்கும் திருவருள் ஞான வின்பத்தை நுகர்ந்து இன்புறுவராதலால் வடலூர் வள்ளல் சிவபெருமானை, “பாலானைத் தேனானைப் பழத்தினானைப் பலனுறு செங்கரும்பானை” என்று பராவுகின்றார். தீயாகிய பூதம் போலின்றி உடலுள் இயங்கி வெப்பத்தைச் செய்யாத பிராண வாயுவை, “பாய்ந்து வேகாக் கால்” என்றும், ஆன்மாவின் அறிவு இச்சை செயல் முதலியவற்றை இயக்கும் கலை வித்தை அராகம் முதலியன உயிர் உடம்பிலிருந்து நீங்குமிடத்துக் கெடுவனவாயினும், திருவருள் நெறியில் ஓங்கினவர்க்கு அவை கெடாது நின்று ஞான வாழ்வு பெறுதற்குத் துணை செய்தலின் அதன்கண் சிவம் விளங்குதல் பற்றி, “கலை சாகாத் தலையினான்” என்றும் கூறுகின்றார். சிவபோக நிலை அடி முடி யறிதற்கில்லாத மாயா மண்டலத்திற்கும் அப்பாலதாதலால், “கால் என்றும் தலை என்றும் கருதற்கு எய்தா மேலான்” என்றும், மாயா தீதப் பரநிலையில் சிவயோகத்தால் கூடினவருக்கு அமுதமாய் இன்புறுத்தல் பற்றி, “மேல் நிலை மேல் அமுதானானை” என்றும் இசைக்கின்றார். உள்ளத்தின்கண் ஞான நாட்டம் கொண்டு நோக்கும் யோகிகட்கு மேன் மேலும் ஒளி மிக்கு விளங்குவதன்றிக் காண்பாருடைய வாக்கு மனங்கட்கு எட்டாமை பற்றி, “மேன் மேலும் எனதுளத்தே விளங்கலன்றி ஏலானை” என்று இயம்புகின்றார். பாடப் பாட இடையறவு படாது மேன் மேலும் தமது உள்ளம் பாடலில் எழுவது பற்றி, “என் பாடல் ஏற்றுக் கொண்ட எம்மான்” எனப் புகழ்கின்றார். தமக்குள் தோன்றி நின்று இன்பக் காட்சி தந்த வண்ணமிருத்தலின், “கண்டு களித்திருக்கின்றேன்” என உவந்துரைக்கின்றார்.
இதனால், வேகாக் காலும் சாகாத் தலையுமாய் வாக்கு மனங்கட்கு எட்டாத மேல் நிலையிலிருந்து இறைவன் காட்சி இன்பம் தருவது நினைந்தோதியவாறாம். (2)
|