பக்கம் எண் :

3937.

     உறவானை என்னுயிர்க்குள் உயிரா னானை
          உறுபிழைகள் செயினும்அவை உன்னி என்னை
     மறவானை அறவாழி வழங்கி னானை
          வஞ்சகர்க்குத் திருக்கோயில் வழிக்க பாடந்
     திறவானை என்னளவில் திறந்து காட்டிச்
          சிற்சபையும் பொற்சபையும் சேர்வித் தானை
     இறவானைப் பிறவானை இயற்கை யானை
          எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

உரை:

     எனக்கு உறவானவனும், என் உயிர்க்குள் உயிராய் இருப்பவனும், யான் மிக்க பிழைகள் பல செய்தாலும் அவற்றைப் பொருளாக உள்ளத்திற் கொண்டு என்னை மறந்து விலக்காதவனும், அருளறமாகிய சக்கரத்தை எனக்கு வழங்கினவனும், நெஞ்சில் வஞ்சமுடைய கீழ்மக்களுக்குத் தனது திருக்கோயிலுள் புகுகின்ற வாயிலில் உள்ள ஞானக் கதவினைத் திறவாதவனும், என்னைப் பொறுத்த அளவில் எனக்கு அந்த ஞானக் கதவைத் திறந்து காட்டிச் சிற்சபையும் பொற்சபையுமாகிய இரண்டினையும் யான் அடையச் செய்தவனும், இறத்தலும் பிறத்தலும் இல்லாதவனும், என்றும் ஒரு தன்மையான இயல்பையுடையவனுமாகிய எங்கள் சிவபெருமானை ஞானக் கண்ணால் கண்டு களித்திருக்கின்றேன். எ.று.

     எனக்குத் தாயும் தந்தையும் குருவுமாய், என்பால் உறவு கொண்டவன் என்பாராய், “உறவான்” என்றும், எனக்கு உயிர்க்குயிராய் இருந்து உண்மையை உள்ளவாறு உணரச் செய்கின்றான் என்பாராய், “என் உயிர்க்குள் உயிரானான்” என்றும் உரைக்கின்றார். முக்குண வயத்தால் அறிவு மயங்கிப் பொறுத்தற் கரிய குற்றங்கள் பல யான் செய்தவிடத்தும் அவற்றைப் பொறுத்து எனக்கு அறிவருளி ஆதரிக்கின்றான் என்பது புலப்பட, “உறு பிழைகள் செயினும் அவை உன்னி என்னை மறவானை” என்றும், அருள் அறமாகிய நல்லறத்தைத் தமக்குரிய இனிய ஞானப் படையாகத் தந்துள்ளான் என்பாராய், “அறவாழி வழங்கினானை” என்றும் இயம்புகின்றார். நெஞ்சில் வஞ்ச முடையார்க்கு ஞானமாகிய வாயில் திறக்கப் படாது என்பது பற்றி, “வஞ்சகர்க்குத் திருக்கோயில் வழிக் கபாடந் திறவானை” என்று சொல்லுகின்றார். “கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தை விட்டு அருத்தியோடு உள்ள மொன்றி உருகுவார் உளத்துள் நின்ற சோதியாம்” என்று ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. மெய்யன்பு செய்யும் தன் பொருட்டு ஞானமாகிய வாயிலைத் திறந்து சிற்சபைக்கும் பொற்சபைக்கும் சென்று கண்டு இன்புற உதவினான் என்பாராய், “என்னளவில் திறந்து காட்டிச் சிற்சபையும் பொற்சபையும் சேர்வித்தானை” என்று மொழிகின்றார். சிற்சபை ஞான நடமும், பொற்சபை ஊன நடமும் நிகழுமிடம் என்பர். தன்னை நினைந்தடையும் உயிர்களில் பிறப்பிறப்புக்களைப் போக்கும் முதல்வனாகிய சிவபெருமான் தான் அவற்றை யுடையனாவது இழுக்காம் என்பது பற்றி, “இறவானைப் பிறவானை” எனவும், எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாகிய செம்பொருள் எனச் சிறப்பிக்கப்படுவது பற்றி, “இயற்கையானை” எனவும் எடுத்துரைக்கின்றார்.

     இதனால், ஞான வாயிலைத் திறந்து சிற்சபையும், பொற்சபையும் காட்டி மகிழ்வித்தமை புகன்றவாறாம்.

     (4)