பக்கம் எண் :

3938.

     அகத்தானைப் புறத்தானை அணுவா னானை
          அணுவினுக்குள் அணுவானை அதனுள் ளானை
     மகத்தானை மகத்தினும்ஓர் மகத்தா னானை
          மாமகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற
     சகத்தானை அண்டமெலாம் தானா னானைத்
          தனிஅருளாம் பெருங்கருணைத் தாயா னானை
     இகத்தானைப் பரத்தானைப் பொதுவில் ஆடும்
          எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

உரை:

     பொருளின் உள்ளும் புறமுமாய் இருப்பவனும், அணுவாகியவனும், அணுவுக்குள் அணுவாகியும் அதனுள்ளும் உட்பொருளாகியும் இருப்பவனும், பலவேறு பெரும்பொருளாகத் திகழ்பவனும், அப்பெரும் பொருட்களினும் பெரும்பொருளாக இருப்பவனும், பெரிய மகத்துவமாய் இருந்தவனும், பலவாய் விளங்குகின்ற உலகங்களாகியவனும், அவ்வுலகங்கள் அடங்கிய அண்டங்களெல்லாம் தானே ஆகியவனும், ஒப்பற்ற திருவருளாகிய பெருங் கருணைக்குத் தாயாகியவனும், இவ்வுலக வாழ்வை யுடையவனும், மேலுலக வாழ்வை உடையவனும், அம்பலத்தில் ஆடுகின்ற எங்கள் பெருமானுமாகிய சிவபெருமானைக் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன். எ.று.

     உலகங்கள், உலகங்களின் உள்ளுறும் பொருட்கள் எல்லாவற்றினும் அகமும் புறமுமாய் இலங்குபவன் என விளக்குதற்கு, “அகத்தானைப் புறத்தானை” என்றும், பொருட்கள் அத்தனையும் எண்ணிறந்த அணுக்களால் ஆகியவையாதலின் அவ்வணுக்களாகவும் அணுவுக்குள் அணுவாகவும், அதன் உள்ளுறு ஆற்றலாகவும் இருக்குமாறு புலப்பட “அணுவானை அணுவினுக்குள் அணுவானை அதன் உள்ளானை” என்றும், அணுக்களின் திரட்சியாகிய பெரிய மலைகளினும் பெரிய பொருளாய் விளங்குபவன் என்றற்கு, “மாமகத்தாய் இருந்தானை” என்றும் இயம்புகின்றார். மகத்து என்பது பெரியவற்றிற் கெல்லாம் பெரியது. மகத்து என்பதைப் பிரகிருதி என்னும் தத்துவமாகவும் உரைப்பது உண்டு. நூலோர் கண்டுரைக்கும் உலகங்கள் யாவுமாய் இருப்பது பற்றி, “வயங்கா நின்ற சகத்தானை” என்றும், உலகங்கள் அத்தனையும் தனக்குள் கொண்ட அண்டம் யாவும் அவனாதல் தோன்ற, “அண்டமெலாம் தானானானை” என்றும் இசைக்கின்றார். அண்டங்களையும் சகங்களையும் மகத்துக்களையும் அணுக்களையும் எல்லாவற்றையும் ஆக்கிப் படைக்கின்ற அருட் சத்தியாகிய தாயைத் தன்பால் உடையவனாதலால், “தனி யருளாம் பெருங் கருணைத் தாயானானை” எனவும், உயிர்கள் எய்துகின்ற இகமும் பரமுமாகிய வாழ்வுகள் யாவுமாய் இருப்பவன் என்றற்கு, “இகத்தானைப் பரத்தானை” எனவும் எடுத்துரைக்கின்றார். அருட் சத்தி பெரய கருணை யுருவின தாகலின், “தனியருளாம் பெருங் கருணைத் தாய்” எனப் புகழுகின்றார். சகங்கள் யாவும் பலவாய் ஒளி யுடையனவாய் இருக்குமாறு புலப்பட, “வயங்கா நின்ற சகம்” என்று சிறப்பிக்கின்றார்.

     இதனால், அணு முதல் அண்டம் யாவுமாய், அண்டத்தில் வாழுகின்ற உயிர்கள் எய்துகின்ற இகபர வாழ்வுகளாய்ச் சிவம் விளங்கும் திறம் தெரிவிக்கப்பட்டவாறாம்.

     (5)