பக்கம் எண் :

394.

    முலைமுகங் காட்டி மயக்கிடும் கொடியார்
        முன்புழன் றேங்குமிவ் வெளியேன்
    நிலைமுகங் காட்டும் நின்திருப் பாத
        நீழல்வந் தடையும்நாள் என்றோ
    மலைமுகம் குழைய வளைத்திடும் தெய்வ
        மணிமகிழ் கண்ணினுள் மணியே
    கொலைமுகம் செல்லார்க் கருள்தருந் தணிகைக்
        குன்றமர்ந் திடுகுணக் குன்றே.

உரை:

     மேரு மலையைக் குழைந்து வில்லாக வளைத்த தெய்வங்களின் முடி மணியாகவுள்ள சிவபிரானை மகிழ்விக்கும் கண்மணியாகிய முருகப் பெருமானே, உயிர்க்கொலை முதலிய தீய வழியில் செல்லாதவர்க்கு அருள் வழங்கும் தணிகை மலையில் எழுந்தருளும் குணக் குன்றமே, கொங்கைகளைப் பிறர் காணக் காட்டி அறிவை மயக்கும் கொடியவர்களாகிய மகளிர் முன்பு திரிந்து வருந்துகின்ற எளியவனாகிய எனக்கு நிலைபேறு நல்கும் நின் திருவடி நிழலை வந்து சேரும் நாள் எப்போதோ, அறியேன் எ. று.

     கல்லைப் பிசைந்து குழைவிக்கும் வித்தகனாதலால், சலியாமையும் திண்மையுமுடைய பெருங் கல்லாகிய மேரு மலையைக் குழைவித்து வில்லாக வளைத்துக் கொண்ட திறல் பற்றிச் சிவபிரானை, “மலைமுகம் குழைய வளைத்திடும் தெய்வமணி” என்றும், அவருடைய கண்ணினின்றும் தோன்றிய முருகனைக் “கண்ணினுள் மணியே” என்று புகழ்கின்றார். கொலை முகம் செல்லார் - கொலையும் புலையுமாகிய குற்றங்களைச் செய்யாதவர். கொங்கையும் முகமும் காண்பார்க்குக் காம வேட்கையைக் கிளரச் செய்வனவாதலால் பொருட் பெண்டிரை, “முலைமுகங் காட்டி மயக்கிடும் கொடியார்” எனவும், அவரது காமத் தீயால் வெதும்பி வருந்தி அலைவது விளங்க, “முன்பு உழன்று ஏங்கும் எளியேன்” எனவும் சொல்லுகிறார். கொடியர் - கொடி போல்பவர் என்றும், கொடுமை யுடையவர் என்றும் இரு பொருள்பட நின்றது. எளிமை - எளிதில் காமத் தீக்கு இரையாதல். நிலைமுகங் காட்டலாவது நிலைபேறு உடையதாதல்.

     இதனால் பொருட் பெண்டிர் விளைவிக்கும் காம மயக்கத்துக் குள்ளாகாமல் திருவடி நிழலைப் பெற விழையுமாறு காணலாம்.

     (5)