பக்கம் எண் :

3940.

     மருத்தானை மணியானை வழுத்தா நின்ற
          மந்திரங்க ளானானை வான நாட்டு
     விருந்தானை உறவானை நண்பி னானை
          மேலானைக் கீழானை மேல்கீழ் என்னப்
     பொருந்தானை என்னுயிரில் பொருந்தி னானைப்
          பொன்னானைப் பொருளானைப் பொதுவாய் எங்கும்
     இருந்தானை இருப்பானை இருக்கின் றானை
          எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

உரை:

     மருத்துவ நூல்கள் உரைக்கின்ற மணி, மருந்து, மந்திரம் ஆகிய மூன்றும் தனித்தனியே ஆகியவனும், விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் விருந்தானவனும், உறவானவனும், நண்பனானவனும், மேலும் கீழுமாய் மேல் கீழ் என்று சொல்லுதற்குப் பொருந்தாதவனும், என்னுடைய உயிரில் கலந்திருப்பவனும், பொன்னும் பொருளுமானவனும், எல்லா வுலகங்களிலும் எவ்விடத்தும் முன்பே இருந்தவனும், இன்றும் இருப்பவனும், நாளையும் இருப்பவனுமாகிய எங்கள் சிவபெருமானைக் கண்டு களித்திருக்கின்றேன். எ.று.

     மந்திரம் ஓதியும், மணிமாலை அணிந்தும், மருந்து கொடுத்தும் நோய் நீக்குவது சித்த மருத்துவச் செந்நெறியாதலின் அதனைச் சிறப்பித்து, “மருந்தானை மணியானை வழுத்தா நின்ற மந்திரங்களானானை” என்று உரைக்கின்றார். செய்யுளாகலின் இம்மூன்றும் முறை மாறி நிற்கின்றன. மணி மந்திரம் மருந்து என்பது இவற்றின் நிற்கும் முறை. மந்திரங்கள் வாயால் உரைக்கப்படுவனவாதலால், “வழுத்தா நின்ற மந்திரங்கள்” என்று விதந்துரைக்கின்றார். வானுலகும் மண்ணுலகும் சிவன் உலாவும் நாடுகள் ஆயினும் சிறப்புப் பற்றி, “வான நாட்டு விருந்தானை” என எடுத்து மொழிகின்றார். பழையரில் பழையனாயினும் தோன்றும் போதெல்லாம் புதுமை தோன்ற எழுந்தருளுவது பற்றி, “விருந்தானை” என்றும், நல்லார் பொல்லார் எல்லார்க்கும் உற்றவிடத்து வேண்டுவன உதவி அருளுவது பற்றி, “உறவானை நண்பினானை” என்றும் இசைக்கின்றார். இவ்விரு நாடுகளிலும் மேல் கீழ் என்னும் பாகுபாடு உண்மையின், மேலோர் சூழலிலும் கீழோர் கூட்டத்திலும் கலந்தருளும் தன்மை பற்றிச் சிவனை, “மேலானைக் கீழானை” எனவும், அப்பெருமானது தனிப் பெருமையை நோக்குமிடத்து மேல் கீழ் என்னும் நிலை வேறுபாட்டிற்கு அவன்பால் இடமில்லாமை தோன்ற, “மேல் கீழ் என்னப் பொருந்தானை” எனவும் இயம்புகின்றார். எல்லா உயிர்க் கண்ணும் போல என்னுடைய உயிரிலும் உயிராய்ப் பொருந்தியிருக்கின்றான் என்றற்கு, “என்னுயிரில் பொருந்தினானை” என்றும், உலகில் பொன்னும் பொருளுமாய் வாழ்வார்க்கு வாழ்வளிப்பது பற்றி, “பொன்னானைப் பொருளானை” என்றும் புகல்கின்றார். எக்காலத்தும் எவ்விடத்தும் எல்லாப் பொருட்களுக்கும் பொதுவாய் நின்று அருள் செய்வது பற்றி, “பொதுவாய் எங்கும் இருந்தானை இருப்பானை இருக்கின்றானை எம்மானைக் கண்டு களித்திருக்கின்றேனே” என்று கூறுகின்றார்.

     இதனால், இறைவன் மணி மந்திர மருந்துகளாய், உறவும் நண்புமாய், மேலும் கீழுமாய், பொன்னும் பொருளுமாய், எக்காலத்தும் எங்கும் இருக்கும் திறம் எடுத்தோதியவாறாம்.

     (7)