பக்கம் எண் :

3945.

     விரித்தானைக் கருவிஎலாம் விரிய வேதம்
          விதித்தானை மெய்ந்நெறியை மெய்யே எற்குத்
     தெரித்தானை நடம்பொதுவில் செய்கின் றானைச்
          சிறியேனுக் கருள்ஒளியால் சிறந்த பட்டம்
     தரித்தானைத் தானேநா னாகி என்றும்
          தழைத்தானை எனைத்தடுத்த தடைகள் எல்லாம்
     எரித்தானை என்உயிருக் கின்பா னானை
          எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

உரை:

     கருவி கரணங்கள் எல்லாவற்றையும் பல்வேறு தத்துவங்களாக விரித்தவனும், வேத நெறியை ஏற்படுத்தினவனும், மெய்ம்மை நெறியாகிய சிவநெறியை அதன் மெய்ம்மை விளங்க எனக்குத் தெரிவித்தவனும், அம்பலத்தில் திருநடம் செய்கின்றவனும், சிறியவனாகிய எனக்குத் தன்னுடைய அருளொளியால் உயர்ந்த தகுதியினை வழங்கினவனும், தானே நானாகி எப்பொழுதும் ஒளிர்பவனும், என் அறிவு செயல்களைத் தடுத்து நிற்கும் குற்றங்களை யெல்லாம் போக்கினவனும், என் உயிர்க்கு இன்பமாய் இருப்பவனுமாகிய எங்கள் சிவபெருமானைக் கண்டு களித்திருக்கின்றேன். எ.று.

     கருவி கரணங்களைத் தத்துவங்கள் முப்பத்தாறாகவும், தாத்துவிகங்களைக் கூட்டித் தொண்ணூற்றாறாகவும் விரித்துக் கூறுதலின், “கருவி எலாம் விரிய விரித்தானை” என்று விளம்புகின்றார். வேத நெறியை இறைவனே வகுத்தான் என ஓதுவ துண்மையின், “வேதம் விரித்தானை” எனவும், சிவாகம நெறியாகிய சிவநெறியை மெய்ந்நெறி என்று சான்றோர் உரைத்தலால், “மெய்ந்நெறியை மெய்யே எற்குத் தெரித்தானை” எனவும் உரைக்கின்றார். வேத நெறியை உலகியல் நெறி என்றும், சிவநெறியை மெய்ந்நெறி என்றும் சேக்கிழார் (ஞானசம்) கூறுவர். சிவநெறியின் பொருள்களைக் குற்றமறத் தெளிவாகத் தமக்கு அறிவித்தமை புலப்பட, “மெய்யே எற்குத் தெரித்தானை” என விளங்க உரைக்கின்றார். அம்பலத்தைப் பொது எனக் கூறுகின்றாராயினும் அன்பர் உள்ளமும் அம்பலமாக இறைவன் ஆடல் புரிகின்றான் என்பதும் குறித்தவாறாகக் கொள்க. அருள் ஞான ஒளியின்றிச் சிறுமையுற்றுக் கிடந்த தமக்கு அதனை நல்கித் தம்மை உயர்வித்தான் என உரைப்பாராய், “சிறியேனுக்கு அருளொளியால் சிறந்த பட்டம் தரித்தானை” எனத் தெரிவிக்கின்றார். பட்டம் - தகுதி. சிவஞானம் பெற்றவர் சிவமாதல் பற்றி, “தானே நானாகி என்றும் தழைத்தான்” என்று கூறுகின்றார். “தன்னைக் கண்ட என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணமாகிய ஈசனுக்குப் பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணமாகிய மேனி” என்று சேரமான் பெருமாள் உரைப்பதும், “மெய்ப் பரம்பொருள் சேர்வார் தாமே தானாகச் செய்யும் அவன்” (கழுமல) என்று ஞானசம்பந்தர் கூறுவதும் இங்கே நினைவு கூரத் தகுவன. சிவமே யாகிய சிவஞானச் செல்வர்கள் பண்டும் இன்றும் என்றும் பலவாதலால், “என்றும் தழைத்தானை” எனக் குறிக்கின்றார். திருவருள் ஞானப் பேற்றுக்குத் தடையாக உயிரறிவை மறிப்பன பலவாதலால் அவை எல்லாவற்றையும் மீளத் தலை யெடாதவாறு போக்கினமை தோன்ற, “எனைத் தடுத்த தடைகள் எல்லாம் எரித்தானை” என்றும், நினைப்பவர் நினைக்கும் தோறும் இன்ப அமுதூறி மகிழ்விப்பவனாதலால், “என் உயிர்க்கு இன்பானானை” என்றும் இசைக்கின்றார். “எண்ணித் தம்மை நினைந்திருந்தேனுக்கு அண்ணித்திட் டமுதூறு மென் நாவுக்கே” (வெண்ணி) என்று திருநாவுக்கரசர் செப்புவது காண்க.

     இதனால், தமக்கு அருளொளி தந்து தானே நானாகித் தழைத்துத் தடைகளைப் போக்கி இன்ப மயமாய்ச் சிவம் விளங்குமாறு விளக்கியவாறாம்.

     (2)