பக்கம் எண் :

395.

    வருபய னறியா துழன்றிடும் ஏழை
        மதியினேன் உய்ந்திடும் வண்ணம்
    ஒருவரும் நினது திருவடிப் புகழை
        உன்னும்நாள் எந்தநாள் அறியேன்
    அருவுரு வாகும் சிவபிரான் அளித்த
        அரும்பெறல் செல்வமே அமுதே
    குருவுரு வாகி யருள்தரும் தணிகைக்
        குன்றமர்ந் திடுகுணக் குன்றே.

உரை:

     அருவுருவாகிய சிவபெருமான் தந்தருளிய பெறுதற்கரிய அருட் செல்வமே, அமுதமே, குரு வடிவம் கொண்டு அன்பர்க்கு அருள் ஞானம் பெறச் செய்யும் தணிகை மலையில் வீற்றிருக்கும் குணக் குன்றமே, செய்வினையால் எய்தும் பயன் இது வென அறியாது வருந்தும் ஏழை மதியுடையவனாகிய யான் உய்தி பெறும் பொருட்டு நீக்குதற்கரிய உன்னுடைய திருவடிப் புகழை எண்ணி மேம்படு நாள் எந்நாளோ அறியேன், எ. று.      அருவப் பொருளுமாகாது உருவப் பொருளுமாகாது அருவுருவ மெய்ப்பொருளாகியவன் சிவபெருமான் என்பதை, “அருவுருவாகும் சிவபிரான்” எனவும், அவனன்றி வேறு எத்தகைய தேவ தேவராலும் மகன் எனக் கருதலாகாமை பற்றி முருகப் பெருமானை, “அரும் பெறல் செல்வமே” என்றும் சிறப்பிக்கின்றார். சிவநெறியை மேற்கொண்டு செல்லும் தவமுடைய மெய்யன்பர்களுக்குக் குரு வடிவில் எழுந்தருளித் திருவருட் சிவஞானத்தை நல்கும் ஆசிரியனாதல் தோன்றக் “குரு வுருவாகி அருள் தரும் குணக் குன்றே” என்று கூறுகின்றார். நல்ல வினைக்கு நற்பயனும் தீய வினைக்குத் துன்பப் பயனும் எய்தும் என்பது பொதுவாக அறியப்பட்ட தாயினும் எவ்விடத்தில், எக்காலத்தில், எவ்வகையில் செய்வினையின் பயன் ஊட்டப்படும் என்றற்கு ஊட்டுவிக்கும் இறைவனை யல்லது பிறர் யாவராலும் அறிய முடியாது என்பது பற்றி, “வருபயன் அறியாது உழன்றிடும் ஏழை மதியினேன்” என்று புகல்கின்றார். ஏழைமதி - மிக்க குறைந்த அறிவு. வருபயன் அறியாமையால் “ஏழை” யென்றும், அறியா தொழியினும் மேன்மேலும் வினைகளைச் செய்த வண்ணமிருத்தலால், “ஏழை மதியினேன்” என்றும் கூறுகின்றா ரெனினும் பொருந்தும். வினைச் சூழலில் அகப்படு உழலுவோர்க்குத் திருவடி ஞானமல்லது உய்தி தருவது வேறு யாதும் இல்லை என்றற்கு, “உய்ந்திடும் வண்ணம் ஒருவரும் நினது திருவடிப் புகழை யுன்னும் நாள் எந்தநாள் அறியேன்” என உரைக்கின்றார். ஒருவுதல் - நீங்குதல், உன்னுதல் - நினைத்தல்.

     இதனால் வினைச் சுழற்சியில் அகப்பட்டார்க்கு உய்தி தருவது திருவடி ஞானம் என்பது உணர்த்தியவாறாம்.

     (6)