3953. உடையானை அருட்சோதி உருவி னானை
ஓவானை மூவானை உலவா இன்பக்
கொடையானை என்குறைதீர்த் தென்னை ஆண்டு
கொண்டானைக் கொல்லாமை குறித்தி டாரை
அடையானைத் திருச்சிற்றம் பலத்தி னானை
அடியேனுக் கருளமுதம் அளிக்க வேபின்
இடையானை என்னாசை எல்லாந் தந்த
எம்மானைக் கண்டு களித் திருக்கின் றேனே.
உரை: என்னைத் தனக்கு அடிமையாக யுடையவனும், அருட் சோதி யுருவினனும், என்னை விட்டு நீங்காதவனும், மூத்து விளிவு இல்லாதவனும், கெடாத பேரின்பத்தைக் கொடுக்கும் செயலை யுடையவனும், எனக்குற்ற குறைகளைப் போக்கி ஆண்டு கொண்டவனும், கொல்லாமையாகிய நல்லறத்தைக் குறிக் கொண்டு மனத்திற் கொள்ளாதவரைச் சேராதவனும், திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளுபவனும், அடியவனாகிய எனக்குத் தன்னுடைய திருவருளாகிய ஞானவமுதத்தை அளிப்பதற்குப் பின்னிடாதவனும், என் கருத்தில் எழும் ஆசை யெல்லாம் தந்து மகிழ்வித்தவனுமாகிய எங்கள் சிவபெருமானைக் கண்ணாரக் கண்டு இன்புற்றிருக்கின்றேன். எ.று.
உலகியற் பொருட்கள் எல்லாவற்றையும் தமக்கு உடைமையாகவும், உயிர் வகை யனைத்தும் தனக்கு அடிமையாகவும் கொண்டவன் என்று சான்றோர் கூறுவது பற்றிச் சிவபெருமானை, “உடையான்” என வுரைக்கின்றார். திருவருள் ஞானமே சிவத்தின் திருவுருவம் எனச் சைவ நூல் பலவும் உரைத்தலால், “அருட் சோதி உருவினானை” எனவும், எல்லாமாய் எங்குமாய் நிறைந்திருப்பது பற்றி, “ஓவானை” எனவும், உலகுயிர்களைப் போல வளர்தலும் தேய்தலும் இல்லாதவன் என்றற்கு, “மூவானை” எனவும் மொழிகின்றார். தன்னை யடைந்தார்க்குச் சிவஞானப் பேரின்பத்தைக் கெடாதவாறு அளிப்பது பற்றி, “உலவா இன்பக் கொடையானை” என்றும், தன்னையடைந்தாருடைய குறையைப் போக்கி அன்பால் ஆண்டு கொள்ளும் அருள் நலத்தை விதந்து, “என் குறை தீர்த்து எனை ஆண்டு கொண்டானை” என்றும் இயம்புகின்றார். “தன்னை யடைந்தார் வினை தீர்ப்ப தன்றோ தலையாயவர்தம் கடனாவது காண்” (அதிகை) என்று திருநாவுக்கரசர் தெரிவித்தருளுவது அறிக. கொல்லாமையாகிய நன்னெறியே சிவநெறியின் வாய்மையாதலால் அதனை மனங் கொள்ளாதவரைச் சிவபெருமான் அடைவதில்லை என்பாராய், “கொல்லாமை குறித்திடாரை அடையானை” எனவும், நினைக்கும் போதெல்லாம் நினைக்கும் போதெல்லாம் இறைவனுடைய திருவருள் ஞான இன்பம் தமக்குள் தோன்றி மகிழ்வித்தமை விளங்க வடலூர் வள்ளல், “அடியேனுக் கருளமுதம் அளிக்கவே பின்னிடையானை என்னாசை எல்லாம் தந்த எம்மானைக் கண்டு களித்திருக்கின்றேன்” எனவும் எடுத்தியம்புகின்றார்.
இதனால், அருட்சோதி உருவுடைய சிவபெருமான் கொல்லாமை கொண்டவரை அடையாமல் அன்புருவான தமக்கு அருளமுதத்தைப் பெருக வழங்கி ஆசையெல்லாம் நிறைவித் தருளிய திறம் தெரிவித்தவாறாம். (10)
|