46. இறைதிருக் காட்சி
அஃதாவது, இறைவனுடைய அருளுருவைக் கண்டு, மகிழ்ந்த வடலூர் வள்ளல் அக்காட்சி யின்பத்தை எடுத்துரைப்பது. இதன்கண் வரும் முப்பது பாட்டுக்களிலும் திருநாவுக்கரசர் முதலிய பெருமக்கள் எடுத்தோதிய முறையில் தமது காட்சி யனுபவத்தை விரித்துரைக்கின்றார்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 3954. அருளெலாம் அளித்த அம்பலத் தமுதை
அருட்பெருஞ் ஜோதியை அரசை
மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை
வள்ளலை மாணிக்க மணியைப்
பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த
புண்ணிய நிதியைமெய்ப் பொருளைத்
தெருளெலாம் வல்ல சித்தைமெய்ஞ் ஞான
தீபத்தைக் கண்டுகொண் டேனே.
உரை: திருவருள் ஞானங்கள் எல்லாவற்றையும் எனக்குத் தந்தருளிய அம்பலத்தில் நடம் புரியும் அமுதம் போல்பவனும், அருட் பெருஞ் சோதி யானவனும், அருளரசானவனும், மயக்க மெல்லாம் போக்கி, என்னை வாழ்வித்த மருந்து போல்பவனும், வள்ளலும் மாணிக்க மணி போல்பவனும், மெய்ப்பொருள் நலம் எல்லாவற்றையும் எனக்குக் கொடுத்து என்னுள்ளத்திற் கலந்து கொண்ட புண்ணியச் செல்வமானவனும், மெய்ப்பொருளாயவனும், தெளிவு முற்றும் அளிக்க வல்ல சித்துப் பொருளானவனும், மெய்ஞ்ஞான விளக்குப் போல்பவனுமாகிய சிவபெருமானைக் கண்ணாரக் கண்டு மகிழ்ச்சி கொண்டேன். எ.று.
அருள் ஞானத்தால் பெறலாகும் பேறுகள் பலவாதலின் இவை எல்லாவற்றையும் எஞ்சாமல் கொடுத்தருளியது பற்றி, “அருளெலாம் அளித்த அம்பலத்து அமுது” என்று புகழ்கின்றார். அம்பலத்தின்கண் அருளுருவாய்த் தோன்றி உள்ளத்தில் அமுதம் போல் இன்பம் செய்வது பற்றி, “அம்பலத் தமுது” என்று சிறப்பிக்கின்றார். திருவருளாகிய பெரிய ஞான ஒளியையே தனக்கு உருவாகக் கொண்டிருத்தல் பற்றிச் சிவனை, “அருட் பெருஞ் சோதி” என்று தெரிவிக்கின்றார். உயிர் வகை செய்யும் வினைத் திறங்களை நோக்கி அவற்றிற்குரிய பயனைச் செய்த உயிர்கள் பெறச் செய்யும் ஆட்சி நலம் விளங்க, “அரசு” எனவும், உலகியல் தரும் மயக்க மெல்லாவற்றையும் போக்கி ஞான நெறியை யுணர்ந்து அதன்கண் செலுத்தி வாழ்வித்து இன்ப மெய்துவித்தல் தோன்ற, “அருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்து” எனவும், அருள் ஞானத்தை வரையாது வழங்குமாறு புலப்பட, “வள்ளல்” எனவும், மாணிக்க மணி போல் சிவந்த நிறமுடையனாதல் பற்றி, “மாணிக்க மணியே” எனவும் மகிழ்ந்துரைக்கின்றார். மெய்ப் பொருளுணர்வால் ஆன்மாக்கள் பெறலாகும் நலங்களைத் தந்து அவர்களின் உள்ளத்திற் கலந்து இன்பங்களை நல்குவதால், “பொருளெலாம் கொடுத்து என் புந்தியில் கலந்த புண்ணிய நிதி” என்றும், அதன் மெய்ம்மைத் தன்மையை விளக்குதற்கு, “மெய்ப் பொருள்” என்றும் விளம்புகின்றார். ஞான நிலை விரிந்து பரந்த இயல்பானதாகலின் அதற்குரிய தெளிவறிவுகள் பலவாதல் விளங்க, “தெருளெலாம் வல்ல சித்து” எனவும், மெய்ஞ்ஞான ஒளியால் ஆன்மாக்களின் உள்ளங்களை விளங்கச் செய்வது பற்றி, “மெய்ஞ்ஞான தீபம்” எனவும் விளம்புகின்றார்.
இதனால், அருட் பெருஞ் சோதியாய், மருள் நீக்கி வாழ்விக்கும் மருந்தாய் மெய்ஞ்ஞான தீபமாய் இறைவன் காட்சி தரும் சிறப்பைப் பாராட்டியவாறாம். (1)
|