பக்கம் எண் :

3982.

     புலைகொலை தவிர்த்த நெறியிலே என்னைப்
          புணர்த்திய புனிதனை எல்லா
     நிலைகளும் காட்டி அருட்பெரு நிலையில்
          நிறுத்திய நிமலனை எனக்கு
     மலைவறத் தெளிந்த அமுதளித் தழியா
          வாழ்க்கையில் வாழவைத் தவனைத்
     தலைவனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
          தந்தையைக் கண்டுகொண் டேனே.

உரை:

     புலால் உண்டல், உயிர்க் கொலை புரிதல் முதலிய குற்றங்களை நீக்கி நன்னெறியின்கண் என்னைச் செலுத்திய புனிதனும், உயிர்கள் எய்தக் கூடிய நிலைகள் எல்லாவற்றையும் காட்டித் திருவருள் ஞானத்தால் பெறும் பெரிய நிலையில் என்னை நிறுத்திய நிமலனும், எனக்கு மயக்கமறத் தெளிந்த ஞானத்தை நல்கி அழியாத இன்ப வாழ்வில் என்னை வாழ்வித்த பெருமானும், எனக்குத் தலைவனும், என்னைப் பெற்ற தாயும் என்னுடைய உரிமைத் தந்தையுமாகிய சிவபெருமானைக் கண்ணால் கண்டு களித்தேன். எ.று.

     புலையும் கொலையும் தீநெறிகளாதலால் அவற்றினின்றும் தம்மை விலக்கி அருள் நெறியில் தம்மைச் செலுத்திய திறம் விளங்க, “புலை கொலை தவிர்த்த நெறியிலே என்னைப் புணர்த்திய புனிதன்” என்று புகல்கின்றார். உயிர்கள் செய்யும் நல்வினைகளுக் கேற்ப மறுமையில் இந்திர பதம் முதலிய பதங்களும், சாலோகம் முதலிய பதங்களும் எய்தும் என நூலோர் கூறுதலால், அவற்றின் இயல்புகளைத் தமக்கு விளங்கக் காட்டிப் பின்னர் சுத்த சன்மார்க்க நெறியால் எய்தப் பெறும் திருவருள் ஞானப் பெருநெறியை மேற்கொண்டு அது நல்கும் சிவநெறியில் தம்மை நிறுத்தினமை பற்றி, “எல்லா நிலைகளும் காட்டி அருட் பெரு நிலையில் நிறுத்திய நிமலன்” என்று கூறுகின்றார். காம வெகுளிகள் போல முற்றவும் நீக்கவியலாத மயக்கத்தைத் தம்மிலிருந்து பற்றற நீக்கி மனவுணர்வு தெளிவு பெறச் சிவஞானமாகிய அமுதத்தை நல்கி அழியாத ஞான இன்பம் நிறைந்த வாழ்வில் வாழ வைத்த சிறப்புணர்த்தற்கு, “மலைவறத் தெளிந்த அமுதளித்து அழியா வாழ்க்கையில் வாழ வைத்தவன்” என மொழிகின்றார். தனக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பை விளக்குதற்குத் தலைவனும், ஈன்ற தாயும், உரிமைத் தந்தையுமாய் இலங்கும் சிவனைக் “கண்டு கொண்டேன்” எனக் களிப்புடன் கூறுகின்றார்.

     இதனால், இறைவன் தமக்குத் தெளிந்த ஞான அமுதளித்து அழியா இன்ப வாழ்க்கையில் வாழ வைத்த நலம் தெரிவித்தவாறாம்.

     (29)