3983. பனிஇடர் பயந்தீர்த் தெனக்கமு தளித்த
பரமனை என்னுளே பழுத்த
கனிஅனை யவனை அருட்பெருஞ் சோதிக்
கடவுளைக் கண்ணினுள் மணியைப்
புனிதனை எல்லாம் வல்லஓர் ஞானப்
பொருள்எனக் களித்தமெய்ப் பொருளைத்
தனியனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
தந்தையைக் கண்டுகொண் டேனே.
உரை: பனி, மழை, வெயில் முதலியவற்றால் உண்டாகும் துன்பங்களால் எய்தும் அச்சத்தைப் போக்கி எனக்கு ஞானமாகிய அமுதை நல்கிய பரமனும், என் உள்ளத்திலே பழுத்து முதிர்ந்த கனி போல்பவனும், அருட்பெருஞ் சோதியை யுடைய கடவுளும், என் கண்ணிலுள்ள மணி போல்பவனும் புனிதனும், எல்லாம் வல்ல ஒப்பற்ற சிவஞானமாகிய பொருளை எனக்குத் தந்தருளிய மெய்ப்பொருளும், தனியவனாகிய என்னை ஈன்ற தாயும், என் உரிமைத் தந்தையுமாகிய சிவ பரம்பொருளைக் கண்டு கொண்டேன். எ.று.
குளிரால் உள்ளத்தையும் உடம்பையும் நடுக்கஞ் செய்யும் பனியை எடுத்து மொழிந்தமையின் இனம் பற்றி, இடர் செய்யும் மழையும், வெயிலும், காற்றும், இடியும் பிறவும் கொள்ளப்படும். இவற்றால் உயிர்கட்கு அச்சம் தோன்றி அறிவை மயக்குதலின், “பனி இடர் பயம் தீர்த்து” எனவும், அதன் மேல் ஞானம் அருளிய குறிப்பை, “எனக்கு அமுது அளித்த பரமன்” எனவும் இயம்புகின்றார். பலகாலும் நினைந்து நினைந்து சிவனருளால் அமுது சுரக்கப் பெற்று இன்புற்றமை தோன்ற இறைவனை, “என்னுளே பழுத்த கனி யனையவன்” என்றும், அருட் பெருஞ் சோதியைத் தனக்கு உடைமையாகக் கொண்டது சிவமாகிய தனிப் பெருங் கடல் என்பதனால், “அருட் பெருஞ் சோதிக் கடவுளை” எனவும் எடுத்தோதுகின்றார். சிவபெருமான் தனக்கு வழங்கி யருளிய மெய்ம்மை ஞானத்தின் பெருமை விளங்குதற்பொருட்டு, “எல்லாம் வல்ல ஓர் ஞானப் பொருள்” என்றும், அதனைத் தரவல்லது “மெய்ப் பொருளே” என்றும் இயம்புகின்றார்.
இதனால், அச்சம் தீர்த்து ஞானப் பொருள் அளித்துச் சிறப்பித்த சிவமாகிய மெய்ப்பொருளின் இயல்பு கூறியவாறாம். (30)
|