பக்கம் எண் :

3985.

     படிசெய்பிர மன்முதலோர் பற்பலநாள் வருந்திப்
          பன்மணிகள் ஒளிவிளங்கப் பதித்தசிங்கா தனத்தே
     அடிசெய்தெழுந் தருளிஎமை ஆண்டருளல் வேண்டும்
          அரசேஎன் றவரவரும் ஆங்காங்கே வருந்த
     வடிசெய்மறை முடிநடுவே மன்றகத்தே நடிக்கும்
          மலரடிகள் சிவப்பஒரு வளமும்இலா அசுத்தக்
     குடிசைநுழைந் தனையேஎன் றேசுவரே அன்பர்
          கூசாமல் என்னுளமாம் குடிசைநுழைந் தனையே.

உரை:

     உலகைப் படைக்கின்ற பிரமன் முதலிய தேவர்கள் பற்பல காலம் முயன்று வருந்திப் பலவகை மணிகள் ஒளி திகழப் பதித்தமைந்த சிங்காதனத்தின்கண் திருவடி பொருந்த எழுந்தருளி எங்களை ஆட்கொண்டருள வேண்டும் அருளரசே என அவரவரும் தனித்தனியாக ஆங்காங்கு நின்று வருந்தி வேண்டவும், திருந்திய வேதாந்தத்தின் நடுவாகிய அம்பலத்தின்கண் நடிக்கின்ற மலர் போன்ற திருவடிகள் சிவக்குமாறு ஒருவகை ஞான வளமுமில்லாத அசுத்தம் பொருந்திய என்னுடைய குடிசைக்குள் நுழைந்தருளினாய் என்று உனக்கு அன்பராயினார் பலரும் உன்னைக் குறை கூறுவராகவும், நீ சிறிதும் சுளிக்காமல் எனது மனமாகிய குடிசைக்குள் நுழைந்து வீற்றருளுகின்றாய்; உனது திருவருள் இருந்தவாறு என்னே! எ.று.

     படி - உலகம். உலகைப் படைக்கும் செயலைப் புரிகின்ற பிரமனைப் “படி செய் பிரமன்” எனப் பகர்கின்றார். முதலோர் என்றதனால் காத்தலைச் செய்கின்ற திருமாலும் அளித்தலைச் செய்கின்ற உருத்திரனும் கொள்ளப்படும். அவர்கள் தாம்தாம் இருந்து பணி புரியும் இடங்களிலிருந்தே வேண்டுகின்றமை தோன்ற, “பற்பல நாள் வருந்தி ஆங்காங்கே வருந்த” என வுரைக்கின்றார். “பன்மணிகள் ஒளி விளங்கப் பதித்த சிங்காதனத்தே அடி செய்து எழுந்தருளி எமை ஆண்டருளல் வேண்டும் அரசே” என்பது பிரமன் முதலோருடைய வேண்டுகோள். மணிகள் இழைத்த பொற் சிங்காதனம் என்றற்கு, “பன்மணிகள் ஒளி விளங்கப் பதித்த சிங்காதனம்” எனக் குறிக்கின்றார். சிங்காதனம் - சிம்மாசனம் எனவும் வழங்கும். சிங்கத்தின் முகமும், முன் காலும் பொறிக்கப்பட்ட ஆசனம் சிங்காதனம் எனப் படுகின்றது. இது அரசர் இருக்கும் அரிய ஆசனமாதலால், “சிங்காதனத்தே எழுந்தருள வேண்டும்” என்பவர், “அரசே” என ஆர்வத்தோடு மொழிகின்றார். அடி செய்தல் - நடந்து வருதல். பிரமன் முதலியோர் ஆங்காங்கே நின்று வருந்தி வேண்டவும் அவர் வேண்டுகோளைப் பொருளாக எண்ணாமல் என் மனமாகிய குடிசைக்குள் நுழைந்தருளி இருந்தருளுகின்றாய் என இயையும், வடி செய் மறை - குற்றமின்றித் தூய்மை செய்யப்பட்ட வேத வேதாந்த நூல்கள். வேதாந்தத்தின் முடிந்த நிலை “பிரம ஞானம்” எனப்படும். அதன் நடுவகத்தை அம்பலமாகக் கொண்டு ஆங்கே ஞான நடம் புரிதலால் சிவனுடைய திருவடிகளை, “வடி செய் மறைமுடி நடுவே மன்றகத்தே நடிக்கும் மலரடிகள்” என்று புகழ்கின்றார். ஞான வளம் நிறைந்த சபையின்கண் பெருமானாகிய நீ அவ்வளம் சிறிதும் இல்லாமையும், மலக் கலப்பால் சுத்த மில்லாமையுமுடைய எனக்குள் நுழைதல் கூடாது என நின்னுடைய ஞானத்தால் தூயராகிய அன்பர்கள் குறை கூறுவர் என்று எண்ணுகின்றாராதலால், “ஒரு வளமுமில்லா அசுத்தக் குடிசை நுழைந்தனையே என்று ஏசுவர் அன்பர்” என்று மொழிகின்றார். அவர்கள் அன்பால் அங்ஙனம் நினைப்பாராக அதனைப் பொருளாக எண்ணாமல் என் உள்ளத்திற் புகுந்து கொண்டாய் என்பாராய், “கூசாமல் என்னுளமாம் குடிசை நுழைந்தனையே” என்று கூறுகின்றார். உனது திருவருள் இருந்தவாறு என்னே என்பது குறிப்பெச்சம்.

     இதனால், பிரமன் முதலியோர் வேண்டி வருந்தவும், அன்பர் ஏசுவாராகவும் நீ என்னுள்ளத்திற் புகுந்தாய் என இறைவனுடைய திருவருள் நலத்தை வியந்து புகழ்ந்தவாறாம்.

     (2)