3987. தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில் லதுவாய்த்
தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு
விடையறியாத தனிமுதலாய் விளங்குவெளி நடுவே
விளங்குகின்ற சத்தியமா மேடையிலே அமர்ந்த
நடையறியாத் திருவடிகள் சிவந்திடவந் தெனது
நலிவனைத்தும் தவிர்த்தருளி ஞானஅமு தளித்தாய்
கொடையிதுதான் போதாதோ என்னரசே அடியேன்
குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
உரை: யாதானும் தடுத்தல் இல்லாத அழகு உடையதாய், தனக்கு ஒப்பில்லாததாய், தத்துவங்கள் எல்லாவற்றிற்கும் ஆதாரமாய், அவற்றிற்கு நீக்க முடியாத முதற் காரணமாய் விளங்குகின்ற பரவெளியின் நடுவிடத்தே இலங்கும் சத்தியமாகிய மேடையிலே வீற்றிருக்கின்ற நடத்தல் இல்லாத திருவடிகள் சிவக்க என்பால் எழுந்தருளி வந்து எனது இடர்கள் அத்தனையும் போக்கி ஞானமாகிய அமுதை எனக்கு அளித்தருளினாய்; இந்தக் ஞானக் கொடை யொன்றே எனக்குப் போதுமன்றோ! அங்ஙனமிருக்க எனக்கு அருளரசாகி நீ அடியேனுடைய உள்ளமாகிய குடிசையிலும் வெறுப்பின்றி மகிழ்ச்சியோடு நுழைந்து கொண்டாய்; உனது திருவருட் பேரருளை என்னென்பேன். எ.று.
பரம்பொருள் எழுந்தருளும் பரவெளி முத்தி பெற்ற ஆன்மாக்கள் சிறுதடையுமின்றி அடையத் தக்க எல்லையும் அழகும் உடையதாய், அதற்கு நிகரெனக் கூறுதற்கு யாதும் இல்லாததாய், ஆன்ம தத்துவம் முதலாக வுள்ள தத்துவங்கள் முப்பத்தாறுக்கும் ஆதாரமாய், அவற்றிற்குத் தனிமுதலாய் விளங்குவதாதலால் அதனை, “தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில்லதுவாய்த் தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு விடையறியாத் தனி முதலாய் விளங்கு வெளி” என்றும், அதன் நடுவே சத்தியம் என்னும் தர்மத்தை மேடையாகக் கொண்டு அதன் மேல் சிவபெருமான் எழுந்தருளுவது தோன்ற, “வெளி நடுவே சத்திய மாமேடையிலே அமர்ந்த திருவடிகள்” என்றும் போற்றுகின்றார். தன்பால் வந்தடையும் சிவமாந் தன்மை எய்திய முத்தான்மாக்களைச் சிறு தடையுமின்றி ஏற்றுக் கொள்வது பற்றிப் பரசிவ வெளியை, “தடையறியாத் தகையினது” என்று சிறப்பிக்கின்றார். மாயா காரியமாகிய தத்துவங்கள் அனைத்திற்கும் முதற் காரணமாகிய மாயை சத்தி வடிவில் தன்னில் ஒடுங்குதற்குத் தானே இடமாதலின், “தத்துவங்கள் அனைத்தினிற்கும் தாரகமாய்” எனவும், அவைகட்குத் “தனிமுதல்” எனவும் சாற்றுகின்றார். ஆன்ம தத்துவம் இருபத்து நான்காகவும், வித்தியா தத்துவம் ஏழாகவும், சிவ தத்துவம் ஐந்தாகவும் விரிவது காண்க. தாரகம் - ஆதாரம். மாயையாகிய பரிக்கிரக சத்தி ஒடுங்குமிடம் “அருட் சத்தி” எனவும், அதனைத் தன்கண் ஒடுக்குவது பரசிவமாதலின் அதற்குரிய பரவெளியை, “அவைக்குத் தனிமுதலால் விளங்கு வெளி” என்று விளம்புகின்றார். மாயையாகிய முதற் காரணம் எத்துணை வகையாய்க் காரியப் படினும் தத்துவங்களை விட்டு நீங்குதல் இல்லாமை பற்றி, “விடையறியாத் தனிமுதல்” என்று இயம்புகின்றார். சத்தாந் தன்மையை யுடையது சத்தியமாதலால் அதனைச் சிவம் எழுந்தருளும் பெரிய மேடையாக உருவகம் செய்கின்றார். மக்களையும் தேவர்களையும் போல நடந்து செல்லும் இயல்பு இல்லாமை புலப்பட இறைவன் திருவடிகளை, “நடையறியாத் திருவடிகள்” என்று நவில்கின்றார். நடத்தல் இல்லாத திருவடி நடக்குமாயின் சிவப்பேறும் என்பது பற்றி, “திருவடிகள் சிவந்திட வந்து” என்றும், அதனால் தம்மை வருத்திய வருத்தங்கள் யாவும் நீங்கினமையால், “எனது நலிவனைத்தும் தவிர்த்தருளி” என்றும், அதனால் தாம் ஞானப் பேற்றிற்குரிய தூய்மை பெற்றமையால், “ஞான அமுதளித்தாய்” என்றும் உரைக்கின்றார். ஞானத்தினும் சிறந்த பொருள் வேறில்லாமை பற்றி, “கொடை யிதுதான் போதாதோ” எனவும், அதனால் எய்தும் ஞானவின்பத்தை மிகுவிப்பாய் போல என்னுடைய உள்ளத்தின்கண் எழுந்தருளுகின்றாய் என்பாராய், “அடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனை” எனவும் கூறுகின்றார், பெருமாளிகையில் இருப்பவர் குடிசையில் நுழைதற்கு நாணுவர் என்பது பற்றி, “குடிசையிலும் கோணாதே நுழைந்தனை” என்று இசைக்கின்றார்.
இதனால், சிவ பரவெளியின் தனி இயல்பு எடுத்துரைத்தவாறாம். (4)
|