பக்கம் எண் :

3991.

     சிரம்பெறுவே தாகமத்தின் அடிநடுவும் முடியும்
          செல்லாத நிலைஅதுவாய் எல்லாம்வல் லதுவாய்
     பரம்பரமாய்ப் பரம்பரமேற் பரவுசிதம் பரமாய்ப்
          பதிவெளியில் விளங்குகின்ற மதிசிவமே டையிலே
     தரங்குலவ அமர்ந்ததிரு அடிகள்பெயர்த் தெனது
          சார்படைந்தென் எண்ணமெலாம் தந்தனைஎன் அரசே
     குரங்குமனச் சிறியேனுக் கிங்கிதுபோ தாதோ
          கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.

உரை:

     உயர்ந்ததாகக் கொள்ளப்படும் வேத ஆகமங்களின் முதலிலும் நடுவிலும் முடிவிலும் காணப் படாத நிலையினை யுடையதும், எல்லாம் வல்லதும், எல்லாவற்றிற்கும் மேன் மேலதாய், அதன் மேலும் நின்று போற்றப்படுகின்ற சிதம்பரமாய், விளங்குகின்ற பதிப் பொருளாய், பரவெளியில் இலங்குகின்ற சிவஞானமாகிய மேடையிலே உயர்வு விளங்க எழுந்தருளும் திருவடிகளை முன் வைத்து என்பால் அடைந்து யான் எண்ணிய எண்ணங்கள் எல்லாவற்றையும் எனக்குத் தந்தருளினாய்; என்னுடைய அருளரசே; அலமருகின்ற மனத்தினால் சிறுமையை யுடைய எனக்கு இது போதுமன்றோ; இங்ஙனம் இருக்கவும் கொடிய புலைத் தன்மையை யுடைய என் உள்ளமாகிய குடிசையிலும் எழுந்தருளுகின்றாய்; உனது அருள் நலந்தான் என்னே! எ.று.

     வேதம் ஆகமம் என்ற இவற்றின் முடிந்த பொருளை வேத சிரம் ஆகம சிரம் என்றெல்லாம் சான்றோர் குறித்தல் இயல்பாதலால், “சிரம் பெறு வேதாகமம்” என்றும், அவற்றின் அடியிலும் நடுவிலும் முடியிலும் விளங்கும் ஞானத்தால் கண்டறியப்படாத நிலைமையை யுடையதாதல் பற்றிப் பரம்பொருள் நிலையை, “வேதாகமத்தின் அடி நடுவும் முடியும் செல்லாத நிலை யதுவாய்” என்றும், தத்துவ வகைகள் எல்லாவற்றுக்கும் படிப்படியாய் உயர்ந்தோங்குவது புலப்பட, “பரம்பரமாய் மேற் பரவு சிதம்பரமாய் விளங்குகின்ற சிவம்” என்றும் இயம்புகின்றார். சிதம்பரம் என்பதற்கு ஞான ஆகாசம் என்பது பொருள். ஞான ஆகாசத்தில் நிலவுவது ஞானமேயான சிவ பரம்பொருள் என்பாராய், “பதி வெளியில் விளங்குகின்ற மதி சிவம்” என மொழிகின்றார். அச்சிவ பதத்தைச் “சிவ மேடை” என உருவகம் செய்து ஆங்கிருந்து சிவபெருமான் தன்பால் எழுந்தருளித் தான் எண்ணிய எல்லாவற்றையும் எய்த அருள் புரிந்தான் என்பாராய், “சிவ மேடையிலே தரங் குலவ அமர்ந்த திருவடிகள் பெயர்த்து எனது சார்படைந்து என் எண்ணமெலாம் தந்தனை” என்று இசைக்கின்றார். குரங்கு போல எங்கும் எப்பொருளிலும் ஆசை கொண்டு அலையுந் தன்மையை யுடையதாதல் பற்றித் தமது மனத்தை, “குரங்கு மனம்” எனப் பழிக்கின்றார்.

     இதனால், வேத சிவாகம ஞான எல்லைக்கு அப்பால் உயர்வற உயர்ந்த சிவத்தின் சிறப்பியல்பு தெரிவித்தவாறாம்.

     (8)