3993. கருவியொடு கரணமெலாம் கடத்துகடந் ததன்மேல்
காட்சியெலாம் கடந்ததன்மேல் காணாது கடந்து
ஒருநிலையின் அனுபவமே உருவாகிப் பழுத்த
உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும்ஒரு வெளியில்
மருவியதோர் மேடையிலே வயங்கியசே வடிகள்
மலர்த்திவந்தென் கருத்தனைத்தும் வழங்கினைஇன் புறவே
குருமணியே என்னரசே எனக்கிதுபோ தாதோ
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
உரை: கருவி கரணங்களைக் கொண்டு, காணும் காட்சி எல்லையைக் கடந்து அதன் மேல் புருவ நடுவில் வைத்துக் காணும் யோகக் காட்சியின் எல்லையும் கடந்து, அதன் மேல் காணப்படாத ஞானக் காட்சி எல்லையையும் கடந்து விளங்கும் ஒப்பற்ற நிலையில் உளதாகும் அனுபவமே உருவாகப் பெற்று, முதிர்ந்த உணர்வுக்கும் காணப்படாமல் உயர்ந்தோங்கும் பெருவெளியில் இருக்கின்ற சிவபோகமாகிய மேடையிலே விளக்க முறுகின்ற சிவந்த திருவடிகள் நிலத்திற் பொருந்த என்பால் வந்து யான் கருதிய பொருள்கள் யாவற்றையும் யான் பெற்று இன்புறுமாறு எனக்கு வழங்கியருளினாய்; எனக்குக் குருமணியும் அருளரசனுமாகிய பெருமானே! எனக்கு இது போதுமன்றோ; அதனோ டமையாது மிக்க புலைத் தன்மையை யுடைய என் மனமாகிய குடிசையிலும் நுழைந்து என்னை மகிழ்விக்கின்றாய்; என்னே நின் திருவருள் இருந்தவாறு. எ.று.
கண் முதலிய கருவிகளாலும், மனம் முதலிய கரணங்களாலும், காண்கின்ற வாயிற் காட்சிக்கும், மானதக் காட்சிக்கும் உரிய எல்லைகளைக் கடந்து நோக்கியதை, “கருவியொடு கரணமெலாம் கடந்து கடந்து” எனவும், அதன் மேல் புருவ நடுவின்கண் அறிவு நாட்டத்தால் புருவ நடுவில் நின்று காணும் யோகக் காட்சி எல்லையைக் கடந்து நோக்கிய திறத்தை, “அதன் மேல் காட்சி யெலாம் கடந்து” எனவும் கூறுகின்றார். அதன் மேல் அறிவுக் காட்சிக்கு எட்டாத பெருநிலையில் கருவி கரண காட்சி யின்மையின் அதனை யோகத்தால் கடந்தமை விளங்க, “காணாது கடந்து” என்றும், அவ்விடத்தே ஞானமும் ஞானானுபவமும் கண்டு அதுவே உருவாகி முதிர்ந்த உணர்வெல்லையிலும் சிவபோகம் உணரப் படாமை பற்றி, “அனுபவமே உருவாகிப் பழுத்த உணர்ச்சியினும் காணாமல்” என்றும், அதன் மேல் ஓங்கித் தோன்றும் உயர்ந்த பரவெளியை, “அதன் மேல் ஓங்கும் ஒரு வெளி” என்றும் இயம்புகின்றார். அப்பரசிவ வெளியில் சிவஞான பீடத்தில் இருந்தருளும் சிவ பரம்பொருளை, “வெளியில் மருவியதோர் மேடையிலே வயங்கிய சேவடிகள்” எனப் புகழ்கின்றார். ஞானத்தால் பெற்ற இன்பத்தை, “என் கருத்தனைத்தும் இன்புறவே வழங்கினை” எனப் பாராட்டுகின்றார். மேற் கொண்ட செயல் முடிவின்கண் இன்பம் பிறப்பது இயல்பாதலால், “இன்புற வழங்கினை” என இசைக்கின்றார்.
இதனால், கருவி கரண யோகக் காட்சிகளால் காணப்படாது ஞானத்தால் உணரப்படும் பரசிவ வெளியின் இயல்பு தெரிவித்தவாறாம். (10)
|