பக்கம் எண் :

37. கூடல் விழைதல்

        அஃதாவது கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம் என்னும் பாடாண்டினை வகையில் நங்கை யொருத்தி தணிகை முருகப் பெருமானைக் கண்டு உரையாடி அவன்பால் மாறாக் காதலால் மனத்தை யிழந்து அவனை அடைவது விரும்பித் தன் உயிர்த் தோழிக்கு உரைப்பது. இறைவன்பால் அன்பு கொள்கின்ற உள்ளம், அவ்வன்பு பெருகப் பெருகப் பக்தியாய் முதிர்ந்து தன்னையும் தன் வாழ்வையும் மறந்து இறைவன் திருவருள் இன்பத்தையே நினைந்தும் மொழிந்தும் ஆடியும் பாடியும் கண்ணீரும் கம்பலையுமாய் ஒழுகப் பண்ணும். இவ்வருளியல் நினைவு செயல்களில் உணர்வு தோய்ந்திருப்பாரை அருளியலார் (Mystics) என வுரைப்பர்; அருளியல் யோகியர் எனவும் அவர்களைக் குறிப்பதுண்டு. ஆண்மை மிக்க ஆடவராயினும் அருளியல் யோகத்தில் மனம் இழந்த பெருமக்கள் ஆண்மையும் வன்மையும் துறந்து மெல்லியற் பெண்மையுணர்வு தலைக்கொண்டு தெய்வக் காதலிகளாய் மாறி விடுவர். இம்மாற்ற நிலை, பான்மயங்கு நிலை, அருளியல் கூடல் நிலை திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் முதல் சான்றோர் பலருடைய வாழ்வில் தோன்றி மலர்ந்து விளக்கம் பெற்றுளது. இவ்வருளியல் யோக நெறியை ஆராய்ந்தவர் பற்பல வகையாக வகுத்து ஆராய்ந்துள்ளனர். இதனை நாயகநாயகி பாவம் (Bridal mysticism) என்கின்றார்கள். இதனை விளக்குபவர், இறைவனை நாயகனாகவும் தம்மை அவனைக் காதலிக்கும் நாயகியாகவும் கருதிப் பேசுவது என்பர். ஞானசம்பந்தருடைய முதற் றிருப்பாட்டே இத் துறையில் அமைந்ததாகும். ஆன்மாவாகிய நாயகி இறைவனது திருவருளைக் கூடல் வேண்டி மேற் கொள்ளும் காதலன்பைத் திருநாவுக்கரசர், “தலைவன் தாள் தலைப்படுதல்” என்பார் போல், இத்தெய்வக் காதல் தோன்றி அரும்பிப் போதாய் மலராய் விரிந்து மணம் கமழும் வரலாற்றை, “முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள், மூர்த்தி யவனிருக்கும் வண்ணம் கேட்டாள், பின்னையவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள், அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத் தன்னைமறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே” (ஆரூர்) என்ற திருத்தாண்டகத்தில் கூறுகின்றார். இவ்வியல்பைத் தம் உள்ளங் கொண்ட மணிவாசகப் பெருமான், “உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்துருகி மத்த மனத்தொடு மாலிவ னென்ன மன நிலைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும் தத்தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே” (சதகம்) என உரைக்கின்றார். சாவதென்றது, அருளியல் நெறியில் உணர் வொழுக்கங்கள் ஒன்றுவதென அறிக. இந்நிலையில் வள்ளற் பெருமான் இறை யன்பு மீதூர்ந்து அருளியல் யோகியராகித் தன்னை மறந்து தன்னாமம் கெட்டுப் பெண்ணியல் மனத்தராய் இறைவனைக் கண்டு உரையாடி ஏமுற்ற செய்தியை இதன் கண் பாட்டுத்தோறும் இசைக்கின்றார். “காமப்பகுதி கடவுளும் வரையார்” என்று தொல்காப்பியம் அமைதி கூறுவதால், இவ்வாறு பாடும் வழக்காறு தொல்காப்பியர்க்கு முன்காலத்தே தோன்றி வழங்கி வருகின்றமை அறியலாம்.

எழுசீர்க் கடிநெடிலடி யாசிரிய விருத்தம்

400.

    சகமா றுடையார் அடையார் நெறியார்
        சடையார் விடையார் தனியானார்
    உகமா ருடையார் உமையோர் புடையார்
        உதவும் உரிமைத் திருமகனார்
    முகமா றுடையார் முகமா றுடையார்
        எனவே எனது முன்வந்தார்
    அகமா ருடையேன் பதியா தென்றேன்
        அலைவாய் என்றார் அஃதென்னே.

உரை:

     உலகியற் பொருள் நெறிக்கண் மயங்குபவர் சென்றடைய முடியாத திருவருள் நெறியை யுடையவரும், முடியிற் சடையையும் ஊர்தியாக எருதையும் தனிப் பெருந்தன்மையையும் யுகம் யுகமான காலங்களையும் உடையவரும் ஆகிய ஒருபால் உமாதேவியைக் கொண்ட சிவபெருமான் பெற்றுதவிய உரிமை மகனாரும், ஆறு முகங்கள் உடைய வருமான முருகப் பெருமான், மாறுபட்ட எண்ணத்தராய் என் முன்பு வந்தருளினாராக, மனையின்கண் இருந்த யான் நுமது ஊர் யாது என்று வினவிய போது, அலைவாய் என்று விடையிறுத்தார்; அதன் கருத்து யாதாம்? எ.று.

     அடையா நெறியாரும் திருமகனாரும் முகமாறும் உடையாருமாகிய முருகப் பெருமான் என இயைத்துக் கொள்க. சகம் - உலகம். உலக வாழ்வு பொருளிலார்க்கு இல்லையாதல் கண்டு அதனை யீட்டித் தொகுக்கும் இன்பத்திலே மயங்கும் இயல்பினரைச் “சகமாறுடையார்” எனவும், பொருள், அருள் நெறிக்குத் துணையும் ஆக்கமுமாவது கருதாமல் பொருளொன்றையே ஈட்டலும் தொகுத்தலுமே வாழ்வாம் என்று எண்ணிச் செயல்படுபவர் சென்று சேர முடியாத அருள் ஞான நெறியின் பயனாக வுள்ளவர் என்றற்குச் “சகமாறுடையார் அடையா நெறியார்” எனவும் எடுத்துரைகின்றார். ஒப்பாரும் மிக்காருமில்லாத முதல்வன் என்பார், “தனியானார்” என்றும், காலக் கடவுள் என்றற்கு “உகமாருடையார்” என்றும் கூறுகிறார். உகம் - பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளைக் கொண்ட கால வரையறை. கிரேதம், துவாபரம், திரேதம், கலி என நான்காக உகங்களைக் குறிப்பர். கால தத்துவத்துக்கு அப்பாலாய் நின்று காலங்களை வகுத்து முறை செய்தானென்பது கொண்டு இறைவனை “உகமாருடையார்” என்கிறார். ஆர், அசைநிலை, ஞானமேயான சிவத்துக்கு ஞானப் புதல்வன் என்பது பற்றி முருகனைச் சிவனுக்கு “உரிமைத் திருமகனார்” எனச் சிறப்பிக்கின்றார். முகம் மாறுவது மனத்தின் கருத்து வேறுபாட்டைக் காட்டுவதாம்; ஆறுமுகங்களையுடைய முருகப் பெருமான், மாறாக ஒருமுகம் உடையராய் வந்தார் என்பது புலப்பட, “முகமாறு உடையார்” என்றார் எனக் கொள்க. “அகமார் உடையேன் எனது முன் வந்தார்” என இயைக்க. ஆர், அசைநிலை. அகத்தின் உள்ளே இருந்தேனாக என் முன்னே வந்தார் என்பது கருத்து. அவருடைய பெயரும் பெருமையும் கேட்டு மகிழ்ந்த யான் ஊர் யாது என்று வினவவும், அவர் “அலைவாய்” என்று கூறினார், அலைவாய் என்று அவர் குறித்தது திருச்சீரலைவாய்; பதியாது எனக் கேட்ட என் கருத்து, பெயரும் ஊர்ப் பெயரும் கேட்டு அங்கே வந்து காண விரும்புகிறேன் என்பதாகக் கொண்டு, எமது ஊர்க்கு வரக் கருதுவாயேல் வழி யறியாமல் வீணே அலைந்து வருந்துவாய் என்றது போல இருந்தமையின், “அஃது என்னே” எனத் தோழியிடம் நங்கை ஆராய்கின்றாள். நீ எங்கே சென்று அவரைக் கண்டாய் எனத் தோழி கேட்பளென் றெண்ணி, “அகமார் உடையேன்; அவர் தாமே எனது முன் வந்தார்” என முன் மொழிகின்றாள்.

     இதனால், அருள் நெறி ஆன்மநாயகி தலைவனாகிய முருகப் பெருமான் எழுந்தருளக் கண்டு பெயரும் வண்ணமும் கேட்டறிந்து ஊர் வினாவியது காணலாம்.

     (1)