4001. உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில்
உளவுயிர் முழுவதும் ஒருங்கே
கொள்ளைகொண் டிடினும் அணுத்துணை எனினும்
குறைபடாப் பெருங்கொடைத் தலைவன்
கள்ளநெஞ் சகத்தேன் பிழைஎலாம் பொறுத்துக்
கருத்தெலாம் இனிதுதந் தருளித்
தள்ளரும் திறத்தென் உள்ளகம் புகுந்தான்
தந்தையைத் தடுப்பவர் யாரே.
உரை: உள்பொருளவாய்க் கோடி கோடியாக இருக்கின்ற, அண்டங்களில் உள்ள உயிர்கள் எல்லாவற்றையும் ஒருங்கு ஆட்கொண்டு, ஒன்று விடாமல் அவற்றிற்கு அருள் வழங்குகின்றானாயினும் தனது அருட் பெருக்கத்தில் ஓர் அணுவளவும் குறைபடுதல் இல்லாத பெரிய கொடையினைச் செய்கின்ற தலைவனாகிய சிவபெருமான் வஞ்சனை பொருந்திய நெஞ்சினை யுடைய என் பிழை யனைத்தையும் பொறுத்துக் கொண்டு நான் கருதிய எல்லாவற்றையும் நன்கு உதவி, விலக்க முடியாத வகையில் எனது உள்ளமாகிய குடிசைக்குள் புகுந்து கொண்டான்; அத்தகைய அருள் தந்தையாகிய அவனைத் தடுக்க வல்லவர் யாவர். எ.று
.
நினைப்பவர் நினைவுக் கெல்லாம் அகப்படாத அளவில் பெருகினவாகக் கூறப்படுதலால் இவ்வண்டங்கள் உள்பொருளோ உள்ளீடில்லாத கற்பனையோ என ஐயுறுவாரும் உண்மையின், “உள்ளவாம் அண்ட கோடி” என உரைக்கின்றார். அண்டங்களின் பெருக்கத்தைப் புலப்படுத்தற்கு, “அண்ட கோடி கோடிகள்” என்று கூறுகின்றார். அண்டங்கள் தோறும் எண்ணிறந்த உயிர்கள் வாழ்கின்றன எனவும், அவ்வுயிர்கள் அனைத்திற்கும் இறைவன் அருள் வழங்குகின்றான் எனவும் பெரியோர்கள் உரைத்தலால், “உள வுயிர் முழுவதும் ஒருங்கே கொள்ளை கொண்டிடினும்” எனவும், அவற்றிற்கு வரையாது வழங்குதலால் அப்பெருமானுடைய அருட் செல்வம் குறைவு படுமோ என ஐயுறாமைப் பொருட்டு, “அணுத்துணை எனினும் குறைபடாப் பெருங் கொடைத் தலைவன்” எனவும் புகழ்ந்துரைக்கின்றார். தமது திருவுள்ளத்தில் தானே உவந்து எழுந்தருளுகின்றானாதலின் முன்னணியாக நெஞ்சிலுள்ள வஞ்சனை பொய் முதலிய அழுக்குகளைத் துடைத்துக் கருதியவற்றைப் பெறாமையால் உண்டாகும் குறைக்கு இடமின்றி அவற்றை நன்கு தந்து நிறைவித்தமை தோன்ற, “கள்ள நெஞ்சகத்தேன் பிழை யெலாம் பொறுத்துக் கருத்தெலாம் இனிது தந்தருளி” என வுரைக்கின்றார். இவ்வண்ணம் தானாகவே உளம் உவந்து அருளுகின்ற பெருமானை விலக்குதல் கூடாமை பற்றி, “தள்ளரும் திறத்து என் உள்ளகம் புகுந்தான்” என்று கூறுகின்றார். (8)
|