பக்கம் எண் :

4003.

     கருமுதற் கருவாய்க் கருவினுட் கருவாய்க்
          கருஎலாங் காட்டும்ஓர் கருவாய்க்
     குருமுதற் குருவாய்க் குருஎலாம் கிடைத்த
          கொள்கையாய்க் கொள்கையோ டளவா
     அருமுதல் அருவாய் அல்லவாய் அப்பால்
          அருட்பெருஞ் ஜோதியாந் தலைவன்
     மருவிஎன் உளத்தில் புகுந்தனன் அவன்தன்
          வண்மையைத் தடுப்பவர் யாரே.

உரை:

     கருக் கொண்டு தோன்றும் பொருள்கள் எல்லாவற்றிற்கும் முதற் கருவாகவும், அக்கருவுக்குள் நிலவும் உட்கருவாகவும், கருவகைகள் எல்லாவற்றையும் தோற்றுவிக்கும் ஒப்பற்ற கருவாகவும், ஞானம் வழங்கும் குருமுதல்வர்கள் எல்லார்க்கும் முதற் குருவாகவும், அக்குரு முதல்வர்களின் கருத்தெல்லாம் திரண்ட கொள்கையாகவும், கொள்கையோடு கலவாத அருவப் பொருட் கெல்லாம் அருவாயும், அல்லதாயும், அதற்கப்பாலதாயும் விளங்கும் அருட்பெருஞ் சோதியாகிய தலைவன் என்பால் அடைந்து என் உள்ளத்திற் புகுந்தருளினான்; ஆகவே அவனது அருள் வண்மையைத் தடுக்க வல்லவர் யாவர். எ.று.

     உயிர்ப் பொருள்கள் அனைத்தும் கரு இடமாகத் தோன்றும் இயல்பினவாதலின் அக்கருவிற்கு முதலும் இறைவன் என்பது விளக்குதற்கு, “கரு முதற் கருவாய்” என்றும், அக்கருப் பொருட்கள் அத்தனையும் தோற்றுவிப்பவன் இறைவனாதல் பற்றி, “கருவினுட் கருவாய்” என்றும், “கருவெலாம் காட்டும் ஓர் கருவாய்” என்றும் உரைக்கின்றார். உயிர் வகைகள் அறிவுடையவாயினும் காட்டக் காண்பதல்லது தாமே எவற்றையும் முற்றவும் கண்டறியும் மொய்ம்பின அல்லவாதலின் அவற்றிற்கு உண்மை காட்டும் அறிவுப் பொருள் இறைவனேயாதலால் அவனை, “குரு முதற் குருவாய்” எனவும், குருமார்களால் உணர்த்தப்படுவன அவரவர் கொள்கைகளாதலின் அக்கொள்கைகள் எல்லாவற்றிற்கும் முதலிடமாவது இறைவன் திருவருளாதல் பற்றி, “குரு வெலாம் கிடைத்த கொள்கையாய்” எனவும் குறிக்கின்றார். அருவப் பொருட்களுக்கு உருவம், கொள்கை இல்லாமையால் அதனை, “கொள்கையோடு அளவா அரு” என்றும், அருவப்பொருட்கள் அனைத்திற்கும் முதலாதல் விளங்க, 'முதல் அருவாய்' என்றும், அருவமும் உருவமும் இல்லாதவன் இறைவன் என்பது பற்றி, “அல்லவாய்” என்றும், உருவமும் அருவமுமாகிய பொருள் வகைகளுக்கு இடமும் காலமும் உண்மையின் இறைவனாகிய பரம் பொருட்கு அவை யில்லை என்பது தோன்ற அப்பால் இவை எல்லாவற்றையும் கடந்த சிவ பரம்பொருள் அருள் ஞான சோதிப் பொருள் என்பது பற்றி, “அருட் பெருஞ் சோதியாம் தலைவன்” என்றும் இயம்புகின்றார். அப்பெருமான் அன்போடு என்னை அடைந்து என்னுள்ளத்தில் எழுந்தருளுகின்றானாதலால் அவனைக் கண்டு தியான வாயிலாக வழிபடுவதல்லது ஏன் வந்தருளினாய் எனத் தடுப்பவர் ஒருவரும் இல்லை என்று வலியுறுத்தற்கு, “மருவு என்னுளத்தில் புகுந்தனன் அவன்தன் வன்மையைத் தடுப்பவர் யாரே” என உரைக்கின்றார்.

     (10)