4009. ஆய்தருவே தாகமத்தின் அடிமுடிநின் றிலங்கும்
அரியபெரும் பொருளைஅவைக் கனுபவமாம் பொருளை
வேய்தருதத் துவப்பொருளைத் தத்துவங்கள் விளங்க
விளங்குகின்ற பரம்பொருளைத் தத்துவங்கள் அனைத்தும்
தோய்தரல்இல் லாததனிச் சுயஞ்சோதிப் பொருளைச்
சுத்தசிவ மயமான சுகாதீதப் பொருளைக்
காய்தரல்இல் லாதென்னைக் காத்தஅருட் பொருளைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
உரை: ஆய்ந்து ஓதப்படுகின்ற வேதாகமங்களின் அடி, நடு, முடி என்ற எல்லா விடத்தும் நின்று விளங்கும் அறிதற்கரிய பெரும் பொருளும், அவற்றின் ஞானத்தால் அனுபூதியாகும் பொருளும், மேன் மேலாய் உள்ள தத்துவப் பொருளும், தத்துவங்கள் தனித்தனி நின்று விளங்குகின்ற பரம்பொருளும், அத்தத்துவங்கள் யாவற்றாலும் கலத்தலில்லாத தனித்த சுயஞ் சோதிப் பொருளும், சுத்த சிவ மயமான கரணங்கட் கெல்லாம் சுகாதீதமாய் நிலவும் பொருளும், என்பால் வெறுப்புக் கொள்ளாமல் காத்தருளிய அருட் பெரும் பொருளுமாகிய சிவத்தை ஞானத்தாற் கண்டு, கருவி கரணங்கள் குழைந்து மகிழ்ந்து கலந்து கொண்டேன். எ.று.
ஞானிகளால் நாள்தோறும் ஆய்ந்தாய்ந்து உண்மை காண்டற்கு ஓதும் உயர் நூலாக விளங்குதலால், “ஆய்தரு வேதாகமம்” எனவும், அவற்றின் பொருளனைத்தும் சிவ பரம்பொருளேயாக இருத்தலால், “அடிமுடி நின்றிலங்கும் அரிய பெரும் பொருள்” எனவும், அவ்வேதாகம ஞானங்களால் அனுபவிக்கப்படும் பொருளாதல் விளங்க, “அவைக்கு அனுபவமாம் பொருள்” எனவும் அறிவிக்கின்றார். அவற்றிற்கு எனற்பாலது சாரியை பெறாமல் அவைக்கு என வந்தது. அடிப்படையில் ஆன்மதத்துவமும், அதன் மேல் வித்தியா தத்துவமும், அதன் மேல் சிவ தத்துவமும் ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கி நிற்றலால் தத்துவங்களை, “வேய்தரு தத்துவம்” என்றும், அத்தத்துவங்களால் உணரப்படுவது பற்றி, “தத்துவப் பொருள்” என்றும், அத்தத்துவங்கள் தாமும் ஆன்ம ஞானப் பொருள் விளக்கத்திற்குத் துணையாவது தோன்ற, “தத்துவங்கள் விளங்க விளங்குகின்ற பரம்பொருள்” என்றும் உரைக்கின்றார். பரம்பொருளை அறிதற்குக் கருவியாவதல்லது அப்பரம்பொருளாவது இன்மை பற்றி, “தத்துவங்கள் அனைத்தும் தோய்தரல் இல்லாத தனிச்சுயஞ் சோதிப் பொருள்” எனவும், அச்சுயஞ் சோதிப் பொருளின் இயல்பு இதுவென விளக்குதற்கு, “சித்த சிவ மயமான சுகாதீதப் பொருள்” எனவும் சொல்லுகின்றார். சுகாதீதம், கருவி கரணங்களால் ஆன்மாக்கள் பெறும் ஞான சுகத்திற்கும் அப்பாலாய் ஓங்கிய பரசுகப் பொருளாதலின் சிவ பரம்பொருளை “சிவ மயமான சுகாதீதப் பொருள்” எனச் சுட்டிக் கூறுகின்றார். உயர்ந்த ஞானவான்களும் முனிபுங்கவர்களும் தேவ தேவர்களும் இருப்பத் தம்மைப் புறக்கணிக்காமல் அன்பால் அண்டு கொண்ட திறம் புலப்பட, “காய்தரல் இல்லாது என்னைக் காத்த அருட் பொருள்” என்று மகிழ்ந்து மொழிகின்றார்
.
இதனால், சுகாதீதப் பொருளாகிய சிவத்தைத் தியான ஞானத்தால் கண்டு சிவானுபவம் பெற்ற, சிறப்பு தெரிவித்தவாறாம். (6)
|