பக்கம் எண் :

4015.

     அம்மையே என்கோ அப்பனே என்கோ
          அருட்பெருஞ் சோதியே என்கோ
     செம்மையே எல்லாம் வல்லசித் தென்கோ
          திருச்சிற்றம் பலத்தமு தென்கோ
     தம்மையே உணர்ந்தார் உளத்தொளி என்கோ
          தமியனேன் தனித்துணை என்கோ
     இம்மையே அழியாத் திருஉரு அளித்திங்
          கென்னைஆண் டருளிய நினையே.

உரை:

     இப்பிறப்பிலேயே கெடாத அழகிய இவ்வுடல் உருவை அளித்து என்னை ஆண்டருளிய பெருமானாகிய உன்னை அம்மை என்பேனோ? அப்பன் என்பேனோ? அருட்பெருஞ் சோதி என்பேனோ? செம்மை நெறியிலேயே எல்லாவற்றையும் செய்ய வல்ல சித்தர் என்பேனோ? திருச்சிற்றம்பலத்தின்கண் அமுத மயமாய் விளங்கும் ஆடலரசன் என்பேனோ? தம்மை யுணர்ந்த ஞானிகளின் உள்ளத்தில் திகழும் ஒளிப் பொருள் என்பேனோ? தனியவனாகிய எனக்குக் கிடைத்த ஒப்பற்ற துணை என்பேனோ? என்னென்று சொல்லுவேன். எ.று.      இம்மை - இப்பிறப்பு. அழியாமையே ஒரு பெருஞ் செல்வமாதலின் அதனையுடைய தமது உடம்பை, “அழியாத் திருவுரு” என்று சிறப்பிக்கின்றார். எல்லா அரிய செயல்களையும் நீதி வழுவாமல் செய்ய வல்லவர் என்பாராய்ச் சித்தர்களை, “செம்மையே எல்லாம் வல்ல சித்து” என்று கூறுகின்றார். சித்து - சித்தர். அரசரை அரசு என்றும், வேந்தரை வேந்து என்றும் கூறுவது போலச் சித்தர்களைச் சித்து எனச் செப்புகின்றார். திருச்சிற்றம்பலம் - தில்லையம்பலம். தில்லையம்பலத்தின்கண் ஆடுகின்ற கூத்தப் பெருமானது ஆடற் காட்சி காண்பார்க்கு அமுதமயமான இன்பம் தருவதால், “திருச்சிற்றம்பலத்து அமுது” என்று புகழ்கின்றார். தம்மையும், தம்முள் இருக்கும் ஆன்மாவையும், தான் வாழ்ந்திருக்கும் உலகத்தையும் நோக்கி அவற்றின் இயல்புகளை யுணர்ந்து அவற்றோடு கூட்டி வாழ்விக்கும் இறைவனையும் உணர்ந்தவர்களை, “தம்மை யுணர்ந்தார்” என்று குறிக்கின்றார். அவர்களின் திருவுள்ளத்தில் ஞான ஒளிப் பொருளாய் இலங்குவது பற்றிச் சிவனை, “உணர்ந்தார் உளத்தொளி என்கோ” என மொழிகின்றார். உலகப் பற்றுக்களை ஒழித்துச் சிவன் அருளே பற்றாகக் கொண்டு வாழ்கின்றமை புலப்பட வடலூர் வள்ளல் தம்மை, “தமியனேன்” என்று இயம்புகின்றார். அம்மையும், அப்பனும், அருட் பெருஞ் சோதியும், எல்லாம் வல்ல சித்தும், அம்பலத் தமுதும், உணர்ந்தார் உளத்தொளியும், தனித் துணையும் என்கோ என இயையும்.

     (2)