4031. தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த
தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ
சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந்
தனில்உறும் அனுபவம் என்கோ
ஒத்துவந் தெனைத்தான் கலந்துகொண் டெனக்குள்
ஓங்கிய ஒருமையே என்கோ
சித்துவந் தாடுஞ் சித்தனே என்கோ
திருச்சிற்றம் பலத்தவ நினையே.
உரை: தில்லையம்பலத்தில் ஆடுகின்ற பெருமானாகிய உன்னைத் தத்துவங்களின் தொடர்பை அறுத்தொழித்து அதீதத்தில் தனித்திருக்கும் சமயத்தில் எனக்குக் கிடைத்த தத்துவாதீத ஞானப் பொருள் என்று சொல்லுவேனோ; சத்துவ குணம், செயல்களே நிறைந்து விளங்கும் சுத்த சன்மார்க்க நெறியில் உளதாகும் ஞானானுபவம் என்று சொல்லுவேனோ; என் மனதுக்கு ஒப்ப வந்து என்னைக் கலந்து என்னுள் உயர்ந்தோங்குகின்ற ஒருமைப் பொருளாகிய சிவம் என்று சொல்லுவேனோ; அனிமா முதலிய சித்துச் செயல்களை விரும்பிப் புரிந்தொழுகும் சித்தன் என்று சொல்லுவேனோ; என்னென்று சொல்லுவேன். எ.று.
தத்துவங்களைக் கடந்த நிலை சாக்கிரத்தில் எய்தும் அதீத நிலை. இதனைச் சாக்கிராதீதம் என்பர். அதன்கண் ஆன்மா சென்று அடங்கும் இடத்துச் சிவமாகிய செம்பொருள் ஞானவான்களுக்குக் காட்சி வழங்குதலின் அதனை, “தத்துவம் அனைத்தையும் தவிர்த்துத் தனித்த தருணத்தில் கிடைத்தது ஒன்று” எனவும், அந்தத் தத்துவாதீதக் காட்சிப் பொருள் இன்ன தன்மைத்தென எடுத்துரைக்கலாகாமையின் அதனை, “கிடைத்தது ஒன்று” எனக் கிளர்ந்துரைக்கின்றார். சுக துக்க போகம் என்ற குணநிலை மூன்றனுள் சுகத்துக்குரிய சத்துவ குணமே சுத்த சன்மார்க்கத்திற்கு வேண்டப்படுவதாகலின், அதனை, “சத்துவம் நிரம்பும் சுத்த சன்மார்க்கம்” எனவும், அந்தச் சுகானுபவமாகிய ஞானானுபவத்தை, “சன்மார்க்கம் தனில் உறும் அனுபவம்” எனவும் இயம்புகின்றார். மனத்தின் சிறுமையையும் தனது பெருமையையும் நோக்கி மனங் கொள்ளும் அளவுக்கு எழுந்தருளிக் காட்சி தந்து உணர்வில் கலந்து, உடல் உயிர் யாவும் தனது சிவ மயமாய் ஒருமையுற இன்புறுத்தியது விளங்கச் சிவ பரம்பொருளை, “ஒத்து வந்து எனைத்தான் கலந்து கொண்டு எனக்குள் ஓங்கிய ஒருமையே” என வுரைக்கின்றார். ஒன்று, அனுபவம், ஒருமை, சித்தன் என்கோ என இயையும். (8)
|