4033. இரவிலா தியம்பும் பகலிலா திருந்த
இயற்கையுள் இயற்கையே என்கோ
வரவிலா வுரைக்கும் போக்கிலா நிலையில்
வயங்கிய வான்பொருள் என்கோ
திரையிலா தெல்லாம் வல்லசித் தெனக்கே
செய்ததோர் சித்தனே என்கோ
கரவிலா தெனக்குப் பேரருட் சோதி
களித்தளித் தருளிய நினையே.
உரை: வஞ்சமின்றிப் பேரருள் ஞானமாகிய சோதியை எனக்கு மகிழ்ந்து நல்கி அருளிய நின்னை, சொல்லப்படுகின்ற இரவும் பகலும் இல்லாதிருந்த காலத்து நிலவிய இயற்கையுள் இயற்கையாய் உள்ளவனே என்று சொல்லுவேனோ; அது குறித்துப் பேசப்படுகின்ற தோற்றக் கேடுகள் இல்லாத நிலையில் விளங்கிய உயர் பரம்பொருள் என்று சொல்லுவேனோ; அசைவு சிறிதுமின்றி அரிய பொருள்கள் எல்லாவற்றையும் முட்டின்றிச் செய்ய வல்லதாகிய சித்தாந்தன்மையை எனக்கு அளித்த ஓர் சித்தர் பெருமானே என்று சொல்லுவேனோ. எ.று.
படைப்புக் காலத்தில் இருந்த சூழ்நிலையாகிய இரவு பகல் இல்லாத மருள் நிலையிலும் பரம்பொருள் அவ்வியற்கைக்குள் இயற்கையாய் இருந்தருளிய இயல்பு புலப்படுத்தற்கு, “இயம்பும் இரவிலாது பகலிலாது இருந்த இயற்கையுள் இயற்கையே என்கோ” என்று இயம்புகின்றார். அந்நாளில் நிலவிய பொருள்கள் போக்குவரவின்றி ஒரு தன்மையவாய் இருந்தனவாக, அக்காலத்தும் விளக்கமுற்றிருந்த பரம்பொருள் நிலையை, “உரைக்கும் வரவிலா போக்கிலா நிலையில் வயங்கிய வான் பொருள் என்கோ” என்று மொழிகின்றார். இரவு பகலற்ற சூழ்நிலையில் போக்குவரவில்லாத பொருள் நிலையில் ஞானிகளின் சொல்லளவில் நிலவின என்பதற்கு, “இயம்பும் இரவும் உரைக்கும் இரவும்” என்று குறிக்கின்றார். திரைதல் - அசைதல். எல்லாம் வல்ல என்றவிடத்து முட்டின்றிச் செய்ய வல்ல என்பது ஆற்றலால் வருவிக்கப்பட்டது. சித்துச் செயல்கள் பலவற்றையும் செய்தற்கேற்ற சித்தாந் தன்மையைத் தனக்குப் பரம்பொருள் நல்கிய செய்தியை வடலூர் வள்ளல் இதனால் குறிப்பது காண்க. கரவு - வஞ்சனை. திருவருள் ஞானம் ஒளி மயமாய் விளங்குதலின் அதனை, “பேரருட் சோதி” என்றும், அஃது இவ்வழிச் சித்தாந் தன்மை கைவராதாகலின் அதனைத் தமக்கருளிய நலம் பாராட்டி, “பேரருள் சோதி களித்து அளித்தருளிய நின்னை” என்றும் சிறப்பிக்கின்றார். பேரருட் சோதி நல்கிய நின்னை, இயற்கையுள் இயற்கை, வான் பொருள், சித்தன் என்கோ என இயையும். (10)
|