பக்கம் எண் :

52. பாமாலை ஏற்றம்

    அஃதாவது, வடலூர் வள்ளல் தாம் பாடிய சொல் மாலைகளை அன்புடன் ஏற்றுக் கொண்ட நலத்தைப் பாராட்டுவதாகும்.

நேரிசை வெண்பா

4034.

     நான்புனைந்த சொன்மாலை நன்மாலை என்றருளித்
     தான்புனைந்தான் ஞான சபைத்தலைவன் - தேன்புனைந்த
     சொல்லாள் சிவகாம சுந்தரியைத் தோள்புணர்ந்த
     நல்லான்தன் தாட்கே நயந்து.

உரை:

     ஞான சபைக்குத் தலைவனும், தேன் போன்ற சொற்களைப் பேசும் சிவகாமசுந்தரியை மணந்து அவளுடைய தோளைக் கூடிய நல்லவனுமாகிய சிவபெருமான், என்பால் அருள் கொண்டு, நான் பாடிய சொன்மாலைகளை அழகிய மாலையாகக் கொண்டருளி விருப்புற்றுத் தன் திருவடிகளில் அணிந்து கொண்டு மகிழ்கின்றான். எ.று.

     ஞான சபைக்கு உரியனாய் எழுந்தருளி அதன்கண் ஆடல் புரிகின்றானாதலால் கூத்தப் பெருமானை, “ஞான சபைத் தலைவன்” என்றும், தேனினும் இனிய சொற்களை வழங்கும் இயல்பினள் என்பது தோன்ற உமாதேவியை, “தேன் புனைந்த சொல்லாள் சிவகாம சுந்தரி” என்றும் கூறுகின்றார். சிவகாம சுந்தரி இன்ப அன்பு வடிவாகிய சிவத்தை விரும்புகின்ற அழகி. எவ்வுயிர்க்கும் எக்காலத்தும் நன்மையே செய்பவன் என்பது தோன்றச் சிவனை, “நல்லான்” என்று நயந்து போற்றுகின்றார். நான் புனைந்த சொன்மாலை என்றவிடத்து நான் என்பது மிகவும் எளியனாகிய நான் என்று பொருள்பட நிற்கிறது.

     இதனால், ஞான சபைத் தலைவனாதலால் நான் பாடியது புல்லிய மாலையாயினும் விரும்பி ஏற்றுக் கொண்டான் என மகிழ்ந்தவாறாம்.   

     (1)