4045. ஆக்கி அளித்தல்முதல் ஆந்தொழில்ஓர் ஐந்தினையும்
தேக்கி அமுதொருநீ செய்என்றான் - தூக்கி
எடுத்தான் அணைத்தான் இறவாத தேகம்
கொடுத்தான்சிற் றம்பலத்தென் கோ.
உரை: திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளும் தலைவனாகிய சிவபெருமான் உலகியலில் வீழ்ந்து கிடக்கும் என்னைத் தூக்கி எடுத்து என்னை மார்பில் அணைத்துக் கொண்டு, என்றும் பொன்றாத ஞான தேகத்தைக் கொடுத்தருளினான்; அதனொடு அமையாது ஆக்கல், அளித்தல் முதலாகிய ஐவகைத் தொழில்களையும் செய்யும் ஆற்றலை நிறைத்து அந் நலத்தை நீ உண்பாயாக என்று மொழிந்தருளினான். எ.று.
ஆக்கி அளித்தல் முதலாம் தொழில் : ஆக்குதல், காத்தல், அழித்தல், அளித்தல், மறைத்தல் என்ற ஐந்துமாம். தொழில் ஐந்தினையும் புரிய வல்ல ஆற்றலை அமுதமாக்கி இதனை நீ உண்க என்றான் என்பது கருத்து. இறவாத தேகம் என்பது ஞான வுடம்பு.
இதனால், இறவாத தேகம் அளித்து ஆக்கல் முதலிய தொழில் செய்யும் ஆற்றலை இறைவன் அருளினமை எடுத்தோதியவாறாம். (12)
|