4052. குருநெறிக் கேஎன்னைக் கூட்டிக் கொடுத்தது கூறரிதாம்
பெருநெறிக் கேசென்ற பேர்க்குக் கிடைப்பது பேய்உலகக்
கருநெறிக் கேற்றவர் காணற் கரியது காட்டுகின்ற
திருநெறிக் கேற்கின்ற துத்தர ஞான சிதம்பரமே.
உரை: உத்தர ஞான சிதம்பரம் குரு உபதேசிக்க வழிவழி வருகின்ற நெறியிலே என்னைச் செலுத்தி ஒழுகுவிப்பதும், சொல்லுதற்கரிய பெருமை சான்ற ஞான நெறிக்கண் ஒழுகுபவர்க்குக் கிடைக்கத் தக்கதும், பேய் உணர்வு மிக்க உலகியல் வாழ்க்கை நெறிக்கு அமைந்த கீழ்மக்கள் அறிவதற்கு அரியதும், உண்மை நெறியைக் காட்டுகின்ற சிவநெறிக்கு ஏற்றதுமாகும். எ.று.
குரு மாணவர்க்குச் சொல்ல, அவர் தமது மாணவர்க்குச் சொல்ல இவ்வாறு வழி வழியாக வருவது குருநெறி எனப்படும். அந்நெறியில் வழி வழியாக வரும் ஞானம் தூய்மையும், எளிமையுமுற்று நலம் பயப்பதாதலின் அந்நெறிக்கண் செலுத்தி நன்மக்களை உய்விக்கும் அந்நெறியில் தம்மை இறைவன் செலுத்தி ஆட்கொண்டமை தோன்ற, “குருநெறிக்கே என்னைக் கூட்டிக் கொடுத்தது” என்று கூறுகின்றார். இயல்பிலேயே திருவருள் ஞானப் பேறு பெற்று அதனால் முதிர்ந்த நல்லோர்க்கும் இந்தக் குருநெறிப் பயன் எய்துவது பற்றி, “பெரு நெறிக்கே சென்ற பேர்க்குக் கிடைப்பது” என்று கிளந்துரைக்கின்றார். இயல்பிலேயே திருவருள் ஞானம் எய்துவது முன்னைப் பிறப்புக்களில் தவஞ் செய்து உயர்ந்தார்க்காதலால், அது காரண காரிய முறையில் எடுத்துரைப்பதற்கு அருமை யுடைமையால், “கூற அரிதாம் பெருநெறி” என்று கூறுகின்றார். ஆசை வழி உழன்று அல்லலுறும் உலகத்தவரை, “பேய் உலகு” என்றும், இப் பேய் உலகியல் பிறந்து இறந்து வருந்துதற்கே காரணமாதலால் அவ்வழி உழல்பவரை, “கருநெறிக்கு ஏற்றவர்” என்றும், அவர்களுக்கு அமைவது பாச ஞானமாதலால் அருள் ஞானம் எய்துவது அரிது என்பது புலப்பட, “கருநெறிக் கேற்றவர் காணற் கரியது” என்றும் இயம்புகின்றார். திருநெறி என்பது சிவநெறி. திருவருள் ஞானத்தை விளங்கக் காட்டி நலம் எய்துவிப்பது பற்றி, “காட்டுகின்ற திருநெறிக் கேற்கின்றது” என இசைக்கின்றார். (7)
|