4053. கொல்லா நெறியது கோடா நிலையது கோபமிலார்
சொல்லால் உவந்தது சுத்தசன் மார்க்கந் துணிந்ததுல
கெல்லாம் அளிப்ப திறந்தால் எழுப்புவ தேதம்ஒன்றும்
செல்லா வளத்தின துத்தர ஞான சிதம்பரமே.
உரை: உத்தர ஞான சிதம்பரம், எவ்வுயிரையும் கொல்லாத ஒழுக்கத்தை யுடையதும், நன்னெறியினின்றும் பிறழாத தன்மை யுடையதும், எத்துணையும் சினங் கொள்ளாத நல்லவர்களின் சொற்களால் மகிழ்ந்து பாராட்டப்படுவதும், சுத்த சன்மார்க்கத்தையே நன்மார்க்கம் எனத் துணிந்து கைக் கொண்டதும், உலகுயிர்கட்கெல்லாம் அருளாதரவு செய்வதும், இறந்தாரை எழுப்புவதும், குற்றம் சிறிதும் பொருந்தாத குண உருவாகியதுமாகும். எ.று.
எவ்வுயிரையும் கொல்லுதல் இல்லாத ஒழுக்கம், “கொல்லா நெறி” என்று குறிக்கப்படுகிறது. கோடுதல் - நன்னெறியினின்றும் பிறழ்தல். கோபமிலார் - குணமென்னும் குன்றேறி நிற்பவர். இப்பெருமக்களால் பெரிதும் மகிழ்ந்து பாராட்டப் படுவது பற்றி உத்தர ஞான சிதம்பர நெறி, “கோபமிலார் சொல்லால் உவந்தது” என்று சொல்லுகின்றார். பன்முறையும் பிறந்திறந்து உழல்பவரைப் பிறவா நிலையில் பிறங்கச் செய்தற்கு உபாயமாதலின், “இறந்தார் எழுப்புவது” என இயம்புகின்றார். உத்தர ஞான சிதம்பரத் திருநெறி துன்பம் பயக்கும் குற்றங்கட்கு இடமில்லாதது என்பாராய், “ஏதம் ஒன்றும் செல்லா வளத்தினது” என்று புகழ்கின்றார். (8)
|