4054. காணாத காட்சிகள் காட்டுவிக் கின்றது காலம் எல்லாம்
வீணாள் கழிப்பவர்க் கெய்தரி தானது வெஞ்சினத்தால்
கோணாத நெஞ்சில் குலாவிநிற் கின்றது கூடிநின்று
சேணாடர் வாழ்த்துவ துத்தர ஞான சிதம்பரமே.
உரை: உத்தர ஞான சிதம்பரம் காணப் படாத காட்சிகளைக் காணச் செய்கின்றதும், காலம் அனைத்தையும் வீணாய்க் கழிப்பவர்க்கு எய்த வொண்ணாததும், மிக்க கோபமுற்ற போதும் நன்னெறியில் வழுவுதலில்லாத நன்னெஞ்சின்கண் இன்புற்று நிற்பதும், வானவரும் தம்மிற் கூடி நின்று வாழ்த்தி வழிபடுவதுமாகும். எ.று.
காணாத காட்சிகள் - ஊனக் கண்களால் காணப்படாத இனிய தெய்வக் காட்சிகள். ஞான மயமாதலால் உத்தர ஞான சிதம்பரத்தைக் கண்ட கண்களுக்குத் தெய்வீகக் காட்சிகள் பலவற்றையும் கண்டு வியக்குமாறு அது காட்டுகின்றது என்பது கருத்து. ஒரு கணமும் நில்லாது கழிந்தவண்ணம் இருக்கும் காலத்தின் அருமையை நினையாது வீண் பொழுது போக்குபவர் ஞானப் பயன் எய்தாதவராதலால், அவர்கட்கு உத்தர ஞான சிதம்பரத்தின் நற்பயன் உண்டாகாமை தோன்ற, “காலமெல்லாம் வீணாள் கழிப்பவர்க்கு எய்த அரிதானது” என்று இயம்புகின்றார். சினம் மிகுந்த வழி மனம் தடுமாற்றமுற்று நன்னெறியில் செல்லா தொழிதலின் சினத்தை ஆளும் நற்பண்புடையவர்க்கு அவை நன்கு பயன்படுவதால், “வெஞ்சினத்தால் கோணாத நெஞ்சில் குலாவி நிற்கின்றது” என்று கூறுகின்றார். சேணாடர் - தேவர் உலகத்தவர். அவர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து வழிபடுகின்றமை புலப்பட, “கூடி நின்று சேணாடர் வாழ்த்துவது” என்று தெரிவிக்கின்றார். (9)
|