4055. சொல்வந்த வேத முடிமுடி மீதில் துலங்குவது
கல்வந்த நெஞ்சினர் காணற் கரியது காமம்இலார்
நல்வந் தனைசெய நண்ணிய பேறது நன்றெனக்கே
செல்வந்தந் தாட்கொண்ட துத்தர ஞான சிதம்பரமே.
உரை: உத்தர ஞான சிதம்பரம் சொல் வடிவாகிய வேதாந்தத்தின் முடி மேல் விளங்குவதும், கல்லொத்த நெஞ்சை யுடையவர்கள் காண்பதற் கரியதும், காம இச்சை முதலியன இல்லாத நல்லவர்கள் நன்கு பணிந்து வழிபடுதற்கு ஏற்ற பேறாய் விளங்குவதும், எளியனாகிய எனக்கு மிக்க அருட் செல்வத்தைத் தந்து என்னை ஆட்கொண்டதுமாகும். எ.று.
வேதம் சொல் உருவினதாதலால் அதன் அந்தமாகிய உபநிடதங்களின் உச்சியில் பிரமப் பொருளாய் விளங்குவது பற்றி, “சொல் வந்த வேத முடிமுடி மீதில் துலங்குவது” என்றும், இரக்கப் பண்பு இல்லாமையால் கல் போல் உறைப்புண்ட மனத்தினை யுடைய வன்னெஞ்சம் உடையவர்களை, “கல் வந்த நெஞ்சினர்” என்றும், அவர்கள் மென்மைப் பண்பும், அருள் நாட்டமும் இல்லா தொழிதலால் அவர்களால் காண்பதற்கு அரிது என்பாராய், “கல் வந்த நெஞ்சினர் காணற் கரியது” என்று கட்டுரைக்கின்றார். காம வேட்கை அறிவை மயக்கும் இயல்பினதாதலால் அதனைத் தவிர்த்து விளங்கும் ஞானிகள் நன்கு வழிபட்டுத் தாம் கருதிய பேறுகளை இனிது பெற உதவுகின்றமை விளங்க, “நல் வந்தனை செய நண்ணிய பேறது” எனவும், தமக்கு வேண்டிய பொருட் செல்வத்தையேயன்றி ஞானப் பேற்றிற்குரிய அருட் செல்வத்தையும் தந்து சன்மார்க்கத்தில் தம்மை ஆண்டு கொண்டமை புலப்பட, “எனக்கு நன்று செல்வம் தந்து ஆட்கொண்டது” எனவும் இயம்புகின்றார். (10)
|