பக்கம் எண் :

4056.

     ஏகாந்த மாகி வெளியாய் இருந்ததிங் கென்னைமுன்னே
     மோகாந்த காரத்தின் மீட்டதென் நெஞ்ச முயங்கிரும்பின்
     மாகாந்த மானது வல்வினை தீர்த்தெனை வாழ்வித்தென்றன்
     தேகாந்த நீக்கிய துத்தர ஞான சிதம்பரமே.

உரை:

     உத்தர ஞான சிதம்பரப் பொருளாகிய சிவ பரம்பொருள் ஒன்றாகிய முடிபொருளாய்ப் பரவெளியாய் இருந்ததும், எளியனாகிய என்னை முன் காலத்தே காம மோகமாகிய இருளில் வீழாவாறு காத்தருளியதும், என் நெஞ்சமாகிய இரும்பைக் கவர்ந்து கொள்ளும் பெரிய காந்தமாக விளங்குவதும், என்னுடைய வல்வினைகளைப் போக்கி நல்வினை செய்து வாழச் செய்து என்னுடைய தேக முடிவாகிய இறப்பை நீக்கியதுமாகும். எ.று.

     ஏக அந்தம் - ஏகாந்தம். பரம்பொருள் ஒன்றே இரண்டும் பலவும் அல்ல என வேதாந்த, சித்தாந்த நூல்கள் பலவும் உரைப்பதால் அதனை, “ஏகாந்தமாகி” என்றும், அஃது மாயா மண்டலத்திற்கு அதீதமாகிய பரவெளியில் வெளி மயமாய் விளங்குவது பற்றி, “வெளியாய் இருந்தது” என்றும் இசைக்கின்றார். மண்ணிற் பிறந்தவர் அனைவரும் காம மோகமாகிய இருளில் அழுந்துவது இயல்பாயினும், அதன்கண் வீழாவாறு தன்னை இறைவன் இளமைப் பருவத்தேயே காத்தருளினான் என்பாராய், “மோகாந்த காரத்தில் என்னை முன்னே மீட்டது” என மொழிகின்றார். மோகாந்த காரம் - காம மோகமாகிய இருள். மோகாந்த காரத்தில் வீழ இருந்த தன்னை வீழாவாறு காத்தமை தோன்ற, “மீட்டது” என விளம்புகின்றார். இரும்பைத் தன்கண் ஈர்க்கும் காந்தம் போல வள்ளற் பெருமானுடைய உள்ளத்தைத் தன்பால் கவர்ந்து கொண்டது என்பார், “என் நெஞ்சம் முயங்கிரும்பின் மாகாந்தமானது” என வுரைக்கின்றார். இரும்பினை ஈர்க்கும் பெரிய காந்தம் போல என் நெஞ்சைத் தன்கண் ஈர்த்துக் கொண்டது என்றற்கு, “நெஞ்சம் முயங்கிரும்பின் மாகாந்தமானது” எனப்படுகிறது. முயங்கிரும்பு - ஈர்க்கப்படும் இரும்பு. தேகாந்தம் - சாக்காட்டால் என் உடல் கெடாதவாறு செய்தது என்பாராய், “தேகாந்தம் நீக்கியது” எனக் கூறுகின்றார். அஃதாவது, அழியாத் தேகமுடையவனாகச் செய்துவிட்டது என்பது கருத்து.

     (11)