பக்கம் எண் :

4070.

     நினைத்தபோ தெல்லாம் நின்னையே நினைத்தேன்
          நினைப்பற நின்றபோ தெல்லாம்
     எனைத்தனி ஆக்கி நின்கணே நின்றேன்
          என்செயல் என்னஓர் செயலும்
     தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம்
          சிவன்செய லாம்எனப் புரிந்தேன்
     அனைத்தும்என் அரசே நீஅறிந் ததுவே
          அடிக்கடி உரைப்பதென் நினக்கே.

உரை:

     அருளரசாகிய பெருமானே! நினைவு கருவியாக நினைக்கலுற்ற பொழுதெல்லாம் யான் நின்னையே நினைத்தேன்; நினைவு ஒன்றுமின்றி இருந்தபொழுது என்னை நின்பால் ஒடுக்கி நின் அருளின்கண் ஒன்றி நின்றேன்; என் செயல் என்று சொல்லத்தக்க வகையில் ஒரு செயலையும் சிறிதளவும் நான் செய்யவில்லை; செய்வன யாவும் சிவன் செயல் என்றே எண்ணினேன்; இவை யாவும் நீ அறிந்தவையாதலால் நான் அடிக்கடி நின்பால் முறையிடுவது எற்றுக்கு? எ.று.

     நினைப்பற நின்றபோது என்பதற்கு, உலகியல் வாழ்வு பற்றிய நினைவுகளின்றி இருந்த பொழுது என்று பொருள் கூறுவதும் உண்டு. உலகியல் வாழ்வை நினையாதபொழுது தமது நினைவு திருவருளையே நினைந்து நின்றமை தோன்ற, “எனைத் தனி ஆக்கி நின்கணே நின்றேன்” என்று கூறுகின்றார். நின்கண் - நின் திருவருளின்கண். திருவருள் நினைவில் அழுந்தியபொழுது செயலனைத்தும் திருவருள் மயமாதல் பற்றி, “என் செயல் என்ன ஓர் செயலும் தினைத்தனை எனினும் புரிந்திலேன்” என்றும், “எல்லாம் சிவன் செயல் எனப் புரிந்தேன்” என்றும் தெரிவிக்கின்றார். திருவருளே உருவாகியவனாதலால் திருவருள் என்னாமல், சிவன் செயலாம் என்று கூறுகின்றார்.

     இதனால், உலகியல் நினைப்பின்றி இருந்தபொழுது வடலூர் வள்ளலின் நினைவு திருவருள் உணர்வில் கலந்து ஒன்றி இருக்கின்றமை தெரிவித்தவாறாம்.

     (2)