பக்கம் எண் :

4073.

     கனவிலே களித்த காலத்தும் நீயே
          களித்தனை நான்களித் தறியேன்
     உளவிலே உவந்த போதும்நீ தானே
          உவந்தனை நான்உவந் தறியேன்
     கொளஇலே சமும்ஓர் குறிப்பிலேன் அனைத்தும்
          குறித்தனை கொண்டனை நீயே
     அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே
          அடிக்கடி உரைப்பதென் நினக்கே.

உரை:

     மனத்தில் கள்ள நினைவு கொண்டு செயல் பல செய்து யான் மகிழ்ந்த பொழுதும், மகிழ்ந்தது நீயே யன்றி நானன்று; உபாயமாகச் சிலவற்றைச் செய்து நான் மகிழ்ந்த போதும், மகிழ்ந்தவன் நீயே யன்றி நானல்ல; இக்களிப்பும் உவப்பும் என் குறிப்பில் இன்றி உன் குறிப்பில் நிகழ்ந்தனவாக நீ ஏன்று கொண்டாய்; மேலும் என்னளவில் எல்லாவற்றையும் நீ அறிந்துள்ளாயாதலின் அருளரசாகிய உனக்கு அடிக்கடி உரைப்பது எற்றுக்கு? எ.று.

     களவில் களித்தலாவது - பிறர் அறியாமல் தன்னுள் நினைத்தலும் சொல்லுதலும் செய்தலும் அவற்றால் மகிழ்தலுமாம். அரிது முயன்று செய்தவனைச் சிறு முயற்சியால் செய்து முடித்துக் கொள்ளற்குரிய அறிவு ஒட்பத்தை “உளவு” என்பர், உபாயம் என வழங்குவதும் இதுவேயாகும். களவில் களிப்பதும், உளவில் உவப்பதும் செய்தற்குரியனவாயினும் இவை திருவருளால் நிகழ்வன என்று உணர்ந்து ஒழுகுபவனாதலால், “நான் களித்தறியேன்” எனவும், “நான் உவந்தறியேன்” எனவும் இயம்புகின்றார். இலேசம் - சிறிதளவு. இவற்றை நினைத்தலும் செய்தலும் என் செயலன்று; எல்லாம் நின் செயலேயாம் என்றற்கு, “இலேசமும் ஓர் குறிப்பிலேன் அனைத்தும் குறித்தனை கொண்டனை நீயே” எனக் கூறுகின்றார். குறித்தனை, கொண்டனை என்றவிடத்து, குறித்தனை என்பது முற்றெச்சம். என்னளவில் எல்லாவற்றையும் நீ உன் செயலாகக் கொண்டனை என்றற்கு, “அளவிலே எல்லாம் அறிந்தனை” என்று உரைக்கின்றார்.      இதனால், தம் செயலனைத்தும் இறைவன் செயலாதல் விளக்கியவாறாம்.

     (5)