4077. ஒன்றெனக் காணும் உணர்ச்சிஎன் றுறுமோ
ஊழிதோ றூழிசென் றிடினும்
என்றும்இங் கிறவா இயற்கைஎன் றுறுமோ
இயல்அருட் நித்திகள் எனைவந்
தொன்றல்என் றுறுமோ அனைத்தும்என் வசத்தே
உறுதல்என் றோஎனத் துயர்ந்தேன்
உன்திரு உளமே அறிந்ததிவ் வனைத்தும்
உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
உரை: தெய்வம் பல என்பதின்றி ஒன்றே என்று அறிந்துணரும் உணர்வு மக்களிடையே எப்பொழுது உண்டாகுமோ; ஊழிகள் பல கழியினும் எப்பொழுதும் இறவாத இயல்பு எப்பொழுது உண்டாகுமோ; திருவருள் சித்திகள் பலவும் என்னை என்று வந்தடையுமோ. அவையனைத்தும் என் வசமாகுமோ என்றெல்லாம் எண்ணி நான் வருந்தினேன்; என் வருத்தம் யாவும் நின் திருவுள்ளம் அறிந்ததாகையால் நான் அடிக்கடி எடுத்துரைப்பது எற்றுக்கு? எ.று.
பலவேறு தெய்வங்களைப் படைத்துக்கொண்டு அவற்றின்பால் பத்தி வெறிகொண்டு மக்களினம் தம்மில் வேறுபட்டுப் பிணங்கியது கண்டு உள்ளம் வருந்தினமை புலப்பட, வடலூர் வள்ளல், “ஒன்றெனக் காணும் உணர்ச்சி என்று உறுமோ” என இயம்புகின்றார். உலகில் உயிர்கள் பல்லூழி காலமாகப் பிறந்தும் இறந்தும் துன்புறுவது நினைந்து ஆறாமையால் வடலூர் வள்ளல் அவலிக்கின்றாராதலின், “ஊழி தோறு ஊழி சென்றிடினும் என்றும் இங்கு இறவா இயற்கை என்று உறுமோ” என்று கூறுகின்றார். திருவருட் பெருக்கால் எய்தக் கடவனவாகிய சித்திகள் தம்பால் அமைதல் வேண்டுமென்ற ஆர்வத்தால், “இயல் அருட் சித்திகள் எனை வந்து ஒன்றல் என்று உறுமோ” எனவும், அவையனைத்தும் தம் வசமாகிய வழி உயிர்கட்கு வேண்டிய நலம் பலவும் தம்மால் ஆற்ற முடியும் என்ற எண்ணத்தால், “அனைத்தும் என் வசத்தே உறுதல் என்றோ எனத் துயர்ந்தேன்” எனவும் மொழிகின்றார்.
இதனால், தெய்வம் ஒன்றெனக் காணும் நல்லுணர்வு நாட்டில் நிலைபெற வேண்டுமென விழைகின்றமை தெரிவித்தவாறாம். (9)
|