பக்கம் எண் :

4078.

     கள்ளவா தனையைக் களைந்தருள் நெறியைக்
          காதலித் தொருமையில் கலந்தே
     உள்ளவா றிந்த உலகெலாம் களிப்புற்
          றோங்குதல் என்றுவந் துறுமோ
     வள்ளலே அதுகண் டடியனேன் உள்ளம்
          மகிழ்தல்என் றோஎனத் துயர்ந்தேன்
     ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்த
          துரைப்பதென் அடிக்கடி உனக்கே.

உரை:

     கள்ளச் செய்கைகளைப் போக்கி அருள் நெறியை விரும்பி மேற்கொண்டு ஒற்றுமையால் பிறக்கும் ஒருமையில் உள்ளம் கலந்து உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் இன்புற்று உயர்தல் எக்காலத்து எய்துமோ; அது கண்டு அடியவனாகிய என் மனம் களிப்பது எக்காலத்தோ என எண்ணி வருந்தினேன். என் வருத்தங்கள் யாவும் நின் திருவுள்ளம் அறிந்ததாகையால் அவற்றை அடிக்கடி நான் எடுத்துரைப்பது எற்றுக்கு? எ.று.

     நெஞ்சிற் கள்ள நினைவும் செய்கையில் வஞ்சனையும் கொண்டு ஒழுகுவதால் மக்களிடையே நிலவும் துன்பத்தை, “கள்ள வாதனை” என்று குறிக்கின்றார். பலவகை வேற்றுமைகளையும் போக்கி மனமொன்றி மக்கள் மனவொருமை உடையராகிய வழி எங்கும் எல்லாம் இன்பமே உடையராய் இன்புற்று உயர்வர் என்ற கருத்தால், “கள்ள வாதனையைக் களைந்து அருள் நெறியைக் காதலித்து ஒருமையில் கலந்தே உள்ளவாறு இந்த உலகெலாம் களிப்புற்று ஓங்குதல் என்று வந்துறுமோ” என்று கூறுகின்றார். உலகம் இன்புறக் கண்டு தாம் இன்புறுவது உயர்ந்தோர் இயல்பாதலின், “அது கண்டு அடியனேன் உள்ளம் மகிழ்தல் என்றோ எனத் துயர்ந்தேன்” என உரைக்கின்றார். திருவருள் ஞானத் திருவுரு உடையனாதலால் சிவனை, “ஒள்ளியோய்” எனப் போற்றுகின்றார்.

     இதனால், மக்கள் உலகு கள்ள வாதனையின் நீங்கி அருட் செல்வராய் இன்புற்று ஓங்க வேண்டுமென விரும்புகின்றமை தெரிவித்தவாறாம்.

     (10)