பக்கம் எண் :

4080.

     ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
          அடிமுடிகண் டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
     பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்
          புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
     எய்யாத அருட்சோதி என்கையுறல் வேண்டும்
          இந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
     நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்
          நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே.

உரை:

     ஐயனே, நான் வேண்டிக் கொள்வனவற்றை எனக்கு அருள வேண்டுகிறேன்; நான் நின்னுடைய திருவடியையும் திருமுடியையும் கண்டு எந்நாளும் உனது அழகை அனுபவிக்க வேண்டும்; பொய் கலவாத வாய்மை உரைகளையே நான் பேசுதல் வேண்டும்; அன்றியும் பேசியபடியே எதனையும் செய்தல் வேண்டும்; பெறுதற் கரிதாகிய நினது திருவருள் ஒளி என் கைவரப் பெற வேண்டும்; இறந்த உயிர்களை மீட்டும் எழுப்பும் திறத்தை எனக்கு அருள வேண்டும்; வருத்தி மெலிந்து கெடாதவண்ணம் உயிர்களைக் காப்பதும் அதற்கேதுவாகிய உனது அருள் நிலையை நீங்காத நிலைமையையும் எய்த வேண்டுகிறேன். எ.று.

     ஐயன் - தலைவன். திருவடியும் திருமுடியும் கண்டாலன்றித் திருவுருவை முழுதும் கண்டு அனுபவிக்க முடியாதாகலின், “அடி முடி கண்டு அனுபவித்தல் வேண்டும்” எனவும், அவ்வனுபவம் இடையறாததாய் இருத்தல் வேண்டும் என்றற்கு, “எந்நாளும் அனுபவித்தல் வேண்டும்” எனவும் இசைக்கின்றார். பொய் கலந்த வாய்மையும் உண்டாதலின் அதனை விலக்குதற்கு, “பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்” என ஓதுகின்றார். “பொய்ம்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்” (குறள்) என்று பெரியோர் உரைப்பது காண்க. “யார்க்கும் சொல்லிய வண்ணம் செயல் அரியவாம்” (குறள்) என்று சான்றோர் கூறுதலால், “புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்” என்று புகல்கின்றார். அருட் சோதி - திருவருள் ஞானம். அஃது ஒளி மயமாதலின், “அருட் சோதி” எனப்படுகிறது. ஏனை ஒளிகள் போல இடையறவு படாத இயல்பின தென்பது விளங்க, “எய்யாத அருட் சோதி” என்று சிறப்பிக்கின்றார். பசுபாச ஞானங்களால் பெறலாகாமை விளங்க, “எய்யாத அருட் சோதி” என இயம்புகின்றார் என அறிக. திருவருள் ஞானம் கைவந்தாலன்றி இறந்த உயிர்களை மீட்பதும், அவற்றுக்கு வருத்தமும் மெலிவு முதலியன எய்திய வழிகாத்தலும் கைகூடாததென்பது பற்றி, “அருட் சோதி என் கையுறல் வேண்டும்” என விண்ணப்பிக்கின்றார். திருவருட் சோதியினின்றும் பிரியாதிருத்தல், தாம் வேண்டுவன அனைத்தும் பெறுதற்கு ஏதுவாதலால் பாட்டுத்தோறும் அதனை உரைத்தருளுகின்றார். நாயகன் - தலைவன்.

     (2)