57. அருள் மாலை விளக்கம்
அஃதாவது, திருவருள் ஞான விளக்கம் எய்திய வடலூர் வள்ளல், ஆறாமை மிகுந்து உள்ளத்தில் பொங்கி எழுந்த இன்ப உணர்ச்சிகளைச் சொன்மாலைகளாய்த் தொடுத்துரைத்தல். இதன்கண் வரும் நூறு பாட்டுக்களும் தமது சொன்மாலையில் ஏற்றருளுமாறு இறைவனை வேண்டும் குறிப்பினவாகும்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 4090. அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
அருள்அமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே
மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா
தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே.
உரை: அருள் விளக்கமும் அருட் சுடருமாகிய அருள் சோதி உருக்கொண்ட சிவ பரம்பொருளே! ஞான அருள் அமுதமே! அருளே நிறைந்த அருள் வடிவப் பொருளே! மனத்திற் படியும் இருளைப் போக்கி என் உள்ளம் முழுதும் இடம் கொண்ட தலைவனே! எனக்கு அறிவும், உயிரும், இனிய உறவுமாகிய பெருமானே! மயக்கத்தை நீக்கி யருளிய பெரிய மாணிக்க மணியே! மாற்றுக் காண மாட்டாத பொன் போன்றவனே! அம்பலத்தில் கூத்தாடுகின்ற ஞான மணவாளனே! எனக்கு ஞான விளக்கம் தந்த திருவருளை ஆள்பவனும். ஞானத் திருவுருவை உடையவனும், தெய்வ நடம் செய்பவனுமாகிய பெருமானே! நான் தொடுக்கின்ற சொல் மாலையை ஏற்றருளுக. எ.று.
திருவருள் ஒளியையும், அதன் சுடரையும், இவ்விரண்டும் கலந்த திருவருள் ஞானப் பேரொளியின் திருவுருச் சோதி என்றற்கு, “அருள் விளக்கே அருட் சுடரே அருட் சோதி” என்றும், அதுவே சிவ வடிவம் என்றற்கு, “அருட் சோதிச் சிவமே” என்றும் உரைக்கின்றார். “சோதியே சுடரே சூழொளி விளக்கே” (அருட்) என்று திருவாசகம் ஓதுவது காண்க. தேவர்கள் கடல் கடைந்து பெற்ற சாவா மருந்தாகிய அமுதத்தின் வேறுபடுத்தற்கு, “அருள் அமுதே” என்று கூறுகின்றார். அருள் ஞானமாய் அயரா இன்பம் தருவது பற்றிச் சிவபெருமானை, “அருளமுதே” என்றும், அதுதானும் குறைவற நிறைந்திருத்தல் விளங்க, “அருள் நிறைவே” என்றும், சிவத்தின் திருவடிவம் அருள் ஞான மயமாதலின், “அருள் வடிவப் பொருளே” என்றும் இயம்புகின்றார். உலகியல் மாயா காரியமாய்த் தன்கண் வாழ்வார்க்கு இருள் செய்யும் இயல்பினதாதலின், உலகியல் போகத்திற் செல்லும் பொய்யறிவைப் போக்கி உண்மை ஞான ஒளி மயமாய்ச் சிவ பரம்பொருள் மெய் யுணர்ந்தோர் உள்ளமெல்லாம் ஞான ஒளி செய்தல் பற்றி, “இருள் கடிந்து என் உளமுழுதும் இடம் கொண்ட பதியே” என்று பகர்கின்றார். அறிவாகவும் உயிர்க்குயிராகவும் பிரியாப் பெருந் துணையாகவும் பிறங்குவதால் சிவத்தை, “என் அறிவே என் உயிரே எனக்கினிய உறவே” என்று ஏத்துகின்றார். மலக் கலப்பால் உயிர் மருளும் இயல்பினதாதலின் அதனைப் போக்கினாலன்றி மாணிக்க மணிமலைபோல் வயங்கும் சிவத்தைக் காண்டல் அரிதென்பது பற்றி, “மருள் கடிந்த மாமணியே” என்றும், உரைத்து மாற்றுக் காணப்படும் உலகியற் பசும் பொன்னின் வேறுபட் டொளிரும் பொன்னிற முடையனாகலின் சிவனை, “மாற்றறியாப் பொன்னே” என்றும் இசைக்கின்றார். அம்பலத்தில் ஆடுகின்ற நிலையில் அருள் ஞான மணம் கமழ விளங்குதலின், “மன்றில் நடம் புரிகின்ற மணவாளா” எனப் போற்றுகின்றார். மணவாளன் - சிவஞானத் திருமணம் கமழத் திகழ்பவன். தெருள் - சிவஞானம். சிவஞானத்தினும் செல்வம் பிறிது வேறின்மை தோன்ற, “தெருள் அளித்த திருவாளா” எனவும், அவருடைய திருமேனியும் சிவானந்த ஞானத் திருவுருவமாதலின், “ஞான உருவாளா” எனவும், இவ்வகைத் திருவும் உருவும் உடையவனாய் அம்பலத்தில் ஆடல் புரிதலால், “தெய்வ நடத்தரசே” எனவும் பாராட்டிப் பரவுகின்றார். செய்மொழி - சொற்களைக் கொண்டு செய்கின்ற சொன் மாலை.
இதனால், தாம் தொடுக்கின்ற சொன் மாலையை ஏற்றருள வேண்டுமென விண்ணப்பித்தவாறாம். இதுவே கருத்தாக இனி வரும் பாட்டுக்கள் நூறும் அமைந்திருத்தலைப் பாட்டு உரைதோறும் உரைத்துக்கொள்க. (1)
|