பக்கம் எண் :

4195.

     தடுத்திடல் வல்லார் இல்லைநின் அருளைத்
          தருகநற் றருணம்ஈ தென்றாள்
     கொடுத்திடில் ஐயோ நின்னருட் பெருமை
          குறையுமோ குறைந்திடா தென்றாள்
     நடுத்தய விலர்போன் றிருத்தலுன் றனக்கு
          ஞாயமோ நண்பனே என்றாள்
     வடுத்தினும் வாயேன் அல்லன்நான் என்றாள்
          வரத்தினால் நான்பெற்ற மகளே.

உரை:

     திருவருள் தந்த வரத்தினால் நான் பெற்றெடுத்த மகள் இறைவனை நோக்கி, முன்னே தடுக்க வல்லவர் ஒருவரும் இல்லையாதலால் இது நல்ல தருணம்; ஆதலின் நின் திருவருளை எனக்குத் தருக என்று வேண்டுகின்றாள்; எனக்கு அதனை நீ நல்கிய வழி உன்னுடைய அருட் பெருமை குறைந்துவிடும் என்று எண்ணுகின்றாயோ; ஐயோ, அது சிறிதும் குறையாது என்று மொழிகின்றாள்; அருள் இல்லாதவர் போல் நடுவே இருப்பது உனக்கு நியாயமாகுமோ; ஆகாது காண் என உரைக்கின்றாள்; குற்றமான சொற்களைப் பேசும் வாயை உடையவளல்ல நான் என்று நற்றாய் வருந்திக் கூறுகின்றாள். எ.று.

     யான் வேண்டுகின்ற இக்காலத்தில், எனக்கு உன் திருவருளைத் தருவாயாயின் உன்னைத் தடுப்பவர் ஒருவரும் இல்லை என்பாளாய், “தடுத்திடல் வல்லார் இல்லை நின் அருளைத் தருக நற்றருணம் ஈது என்றாள்” என்றும், கொள்ளக் குறைபடாத பெருமையுடையது இறைவன் திருவருள் என்ற கருத்தினை உடையவளாதலால், “கொடுத்திடல் ஐயோ நின்னருட் பெருமை குறையுமோ குறைந்திடாது என்றாள்” என்றும் தன் மகளின் மனநலத்தை நற்றாய் எடுத்துரைக்கின்றாள். எல்லா ஆன்மாக்களிடத்தும் உடனிருந்து நல்லுணர்வும் நல்லின்பமும் கொடுக்கும் நட்புடையவன் சிவபிரான் என்பது அறிந்தவளாதலால் சிவனை நினைந்து, “நடுத்தயவிலர் போன்றிருத்தல் உன்றனக்கு ஞாயமோ நண்பனே என்றாள்” என இயம்புகின்றாள். வடுத்தினும் வாயேன் - வடுவான சொற்களைப் பேசும் வாயை உடையவளல்லள் என் மகள் என்பாளாய், “வடுத்தினும் வாயேன் அல்லன் நான் என்றாள்” என்று நற்றாய் தன் மகள் கூறுவதை எடுத்தோதுகின்றாள். வடு - குற்றமான சொற்கள்.

     (6)