4199. ஆடிய பாதத் தழகன்என் றனைத்தான்
அன்பினால் கூடினன் என்றாள்
கோடிமா தவங்கள் புரியினும் பிறர்க்குக்
கூடுதல் கூடுமோ என்றாள்
பாடிய படிஎன் கருத்தெலாம் நிரப்பிப்
பரிசெலாம் புரிந்தனன் என்றாள்
வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
உரை: அருள் வரத்தால் நான் பெற்றெடுத்த என் மகள் அம்பலத்தின்கண் அருள் நடம் புரியும் திருவடியையுடைய அழகனாகிய சிவபெருமான் என்னை அன்போடு கலந்து கூடினான் எனவும், எண்ணிறந்த பெரிய தவங்களைச் செய்தாலும் பிறர் யாவர்க்கும் இக் கூட்டத்தைப் பெறுதல் இயலாது எனவும், நான் மனம் கலந்து பாடியவாறே, என் மனம் முழுதும் நிறைந்து சிவபோகப் பான்மைகள் யாவையும் எனக்குத் தந்தருளினான் எனவும் பெறாது வாடி வருந்திக் கிடந்த நான் மனம் தளைத்தேன் எனவும் வாய் வெருவுகின்றாள் என நற்றாய் எடுத்து மொழிகின்றாள். எ.று.
அன்பினால் கூடினன் என்றற்கு, எனது அன்பு மிகுதி கண்டு நயந்து கூடியருளினான் எனப் பொருள் கூறினும் பொருந்தும். “கோடி மாதவம்”, எண்ணிறந்த பெரிய தவங்கள். உண்மை யோக ஞானங்களன்றிப் பிறவாற்றால் எத்தனை பெரிய தவங்கள் செய்யினும் பிறரால் இச் சிவபோகத்தைப் பெறலரிது என்றற்கு, “கோடி மாதவங்கள் புரியினும் பிறர்க்குக் கூடுதல் கூடுமோ” எனத் தலைவி உரைக்கின்றாள். கூடுதல் கூடுமோ என்பது, “உண்ணும் உண்ணேன்” (கலித்.) என்றாற் போல வந்தது. பாடிய பாட்டின்கண் விரும்பி வேண்டிய நலங்களை முழுதும் பெற்றமை தோன்ற, “பாடியபடி என் கருத்தெலாம் நிரப்பிப் பரிசெலாம் புரிந்தனன்” எனத் தலைவி மகிழ்ந்துரைக்கின்றாள். சிவானந்த நுகர்ச்சியால் மனம் இன்பத்தால் நிறைவுற்று, மெய் தளிர்த்தமையின், “வாடிய உளமும் தளிர்த்தனன்” என்று தலைவி கூறுகின்றாள் என நற்றாய் மெய்ம்மறந்து விளம்புகின்றாள். (10)
|